செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பயணிகளின் மறியல் போராட்டத்தால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள், சென்னை புறநகரில் கல்லூரிக்கு செல்வோர், பணிக்கு செல்வோர் என பலர் ரயில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரத்தில் இருந்து தாம்பரம் வரை காலை 6:40க்கு விழுப்புரம் பாசஞ்சர் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இதில் அதிகளவில் பயணிகள் பயணித்து வருகின்றனர். இந்த ரயில் கடந்த சில தினங்களாகவே 20 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை காலதாமதமாக செல்வதால் பணிக்கு செல்வது, கல்லூரிக்கு செல்வது காலதாமதம் ஏற்படுவதாக பயணிகள் கூறி விழுப்புரத்திலிருந்து தாம்பரம் நோக்கி வந்த ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையிலிருந்து மதுரைக்கு செல்லக்கூடிய தேஜஸ் எக்ஸ்பிரஸ் வந்துகொண்டிருந்த போது அதனை மடக்கி அரை மணி நேரத்திற்கு மேலாக மறியலில் ஈடுபட்டனர்.
பின்பு அங்கு வந்த ரயில்வே போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தேஜஸ் எக்ஸ்பிரசை அனுப்பிவைத்தனர். இத்தகைய மறியல் போராட்டத்தால் விழுப்புரம் ரயில் 1 மணி நேரம் காலதாமதமாக இயக்கப்பட்டது. மேலும் புதுச்சேரியிலிருந்து எஃமோருக்கு இயக்கக்கூடிய புதுச்சேரி எக்ஸ்பிரஸ் 1 மணி நேர காலதாமதமாக சென்றது. இதனால் பெரும்பாலான பயணிகள் பணிக்கு செல்லாமல் வீடு திரும்பினர்.
ரயில்வே நிர்வாகம்
கடந்த சில தினங்களாகவே கடுமையான பனி பொழிந்து வருவதால் ரயில்வே இருப்பு பாதைகள் சரியாக தெரியாததால் மெதுவாக வருவதாகவும் இதனால் காலதாமதம் ஏற்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
The post செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பயணிகளின் மறியல் போராட்டத்தால் ரயில் சேவை பாதிப்பு..!! appeared first on Dinakaran.