×

8 வயது சிறுமி பலாத்காரம்: வாலிபர் கைது, மக்கள் மறியல்

ஊட்டி: ஊட்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஊட்டி அருகே உள்ள தலைக்குந்தா பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரின் 8 வயது மகள் அப்பகுதியில் உள்ள கோயில் விழாவுக்கு சென்றுவிட்டு, வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார் (23) என்பவர் சிறுமியை அவரது தாத்தா வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி அருகில் இருந்த காட்டிற்குள் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அக்கம்பக்கத்தில் சிறுமியை தேடினர். அப்போது காட்டில் பலத்த காயத்துடன் கிடந்த சிறுமியை மீட்ட பெற்றோர், சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுமியிடம் பெற்றோர் விசாரித்ததில், தன்னை அஜித்குமார்தான் பலாத்காரம் செய்தார் என்று கூறி உள்ளார். இதையடுத்து ஹாயாக சுற்றித்திரிந்த அஜித்குமாரை பிடித்த அப்பகுதி மக்கள் தர்ம அடி கொடுத்தனர். தகவலறிந்து வந்த போலீசார் பலத்த காயமடைந்த அஜித்குமாரை மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து புகாரின் பேரில் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் ஊட்டி புதுமந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர். இந்நிலையில், அஜித்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி நேற்று காலை தலைகுந்தா பகுதி பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் ஊட்டி – கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அங்கு வந்த போக்குவரத்து மற்றும் காவல் துறை அதிகாரிகள் அஜித்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்வதாக எழுத்துபூர்வமாக உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அஜித்குமார் கடந்த ஆண்டு வேறு ஒரு சிறுமியை பலாத்காரம் செய்தது தொடர்பாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சில மாதங்களுக்கு முன்புதான் ஜாமீனில் வந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post 8 வயது சிறுமி பலாத்காரம்: வாலிபர் கைது, மக்கள் மறியல் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Thalikunda ,
× RELATED பூங்கா சாலையோர கால்வாயில்...