×

பத்திரிகையாளர் மீது தொடர்ந்த மான நஷ்ட வழக்கு 30ம் தேதி இபிஎஸ் நேரில் ஆஜராகி சாட்சியம்: எடப்பாடி தரப்பு வழக்கறிஞர் ஐகோர்ட்டில் தகவல்

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளிக்க உள்ளதால் பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுக்கு எதிராக மான நஷ்ட ஈடு கோரிய வழக்கின் விசாரணையை அடுத்த மாதத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக 2019ம் ஆண்டு தற்போது அதிமுக பொதுச் செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது என்று எடப்பாடி பழனிசாமி கூறியதை ஏற்ற தனி நீதிபதி, சாட்சியங்களை பதிவு செய்வதற்காக வழக்கறிஞர் எஸ்.கார்த்திகைபாலனை நியமித்தது. இந்த உத்தரவை எதிர்த்து மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வு உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் ஜனவரி 30 மற்றும் 31ம் தேதிகளில் எடப்பாடி பழனிச்சாமி ஆஜராகி சாட்சியம் அளிக்குமாறு உத்தரவிட்டனர் .

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு நீதிபதி என்.சதிஷ்குமார் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், இரு நீதிபதிகள் உத்தரவின்படி வரும் 30 மற்றும் 31ம் தேதிகளில் மாஸ்டர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆஜராகி சாட்சியமளிக்க உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை பிப்ரவரி 8ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

The post பத்திரிகையாளர் மீது தொடர்ந்த மான நஷ்ட வழக்கு 30ம் தேதி இபிஎஸ் நேரில் ஆஜராகி சாட்சியம்: எடப்பாடி தரப்பு வழக்கறிஞர் ஐகோர்ட்டில் தகவல் appeared first on Dinakaran.

Tags : EPS ,Edappadi ,Chennai ,Madras High Court ,Mathew Samuel ,AIADMK ,general secretary ,Edappadi Palaniswami ,Koda Nadu ,Dinakaran ,
× RELATED ஏற்காடு விபத்து: காயம் அடைந்தோருக்கு இபிஎஸ் ஆறுதல்