×

வேலை நிறுத்தம் தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை

சென்னை: வேலை நிறுத்தம் தொடர்பாக தொழிலாளர் நல இணை ஆணையர் தலைமையில் அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையே இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடக்கிறது. பழைய ஓய்வூதிய திட்டம், காலிப் பணியிடங்களை நிரப்புவது, ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்துவது, 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கின. தொமுச தவிர மற்ற தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த நோட்டீஸை வழங்கினர்.

இதையடுத்து, தொழிலாளர் நலத்துறை, தொழிற்சங்கங்கள் மற்றும் போக்குவரத்துக்கழக நிர்வாகங்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. டிச.27, ஜன.3, ஜன.8 ஆகிய தினங்களில் 3 கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு எட்டப்படாததை தொடர்ந்து தொழிற்சங்கங்கள் கடந்த 9, 10 ஆகிய நாட்களில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலை நிறுத்தத்தை தடை செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையில் பொதுமக்களின் நலன் கருதி வேலை நிறுத்தத்தை ஒத்தி வைப்பதாக தொழிற்சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர். மேலும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இந்நிலையில் ஜன.19ம் தேதி (இன்று) போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு தொழிலாளர் நல ஆணையம் அழைப்பு விடுத்தது. இன்று மதியம் 12 மணியளவில் அம்பத்தூரில் உள்ள தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் தொழிலாளர் நல இணை ஆணையர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடக்கிறது.

The post வேலை நிறுத்தம் தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Tags : Tripartite ,CHENNAI ,Joint Commissioner of Labor ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...