சென்னை: நடிகர் விக்ரம் நடிப்பில், கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி, தயாரித்த “துருவ நட்சத்திரம் திரைப்படம் கடந்த நவம்பர் 24ல் வெளியாக இருந்தது. இந்த படத்தை வெளியிட இடைக்கால தடை கோரி ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவன பங்குதாரர் விஜய் ராகவேந்திரா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். மனுவில், சிம்புவை நாயகனாக வைத்து “சூப்பர் ஸ்டார்” என்ற படத்தை இயக்குவதற்காக கவுதம் வாசுதேவ் மேனன் தங்கள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டதாகவும், முன்பணமாக 2018ல் ரூ.2 கோடியே 40 லட்சம் அளித்தோம்.
ஒப்பந்தப்படி அந்த பட வேலைகள் நடைபெறாத நிலையில் முன்பணத்தை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் திருப்பி தரவில்லை. அதை திருப்பி அளிக்காமல் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட தடை விதிக்க கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பணத்தை திருப்பி அளிக்கும்பட்சத்தில், துருவ நட்சத்திரம் படத்தை வெளியிடலாம் என நவம்பர் 22ம் தேதி உத்தரவிட்டது.
ஆனால், பணத்தை திரும்ப செலுத்தாததால், இதுவரை படத்தை வெளியிடமுடியவில்லை. இந்நிலையில், வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கவுதம் மேனன் தரப்பில் வழக்கறிஞர் ரேவதி மணிகண்டன் ஆஜராகி, துருவ நட்சத்திரம் படத்தை பிப்ரவரியில் வெளியிட திட்டமிட்டுள்ளதால் வழக்கை 3 வாரம் தள்ளிவைக்க கோரினார். இதையடுத்து, விசாரணையை 3 வாரத்திற்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
The post நடிகர் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படத்தை பிப்ரவரியில் வெளியிட திட்டம்: இயக்குநர் தரப்பில் ஐகோர்ட்டில் தகவல் appeared first on Dinakaran.