×

கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க கால அவகாசம் வேண்டும்: உரிமையாளர்கள் கோரிக்கை

சென்னை: ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க கால அவகாசம் வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிளாம்பாக்கத்தில் பல்வேறு நவீன வசதிகளுடன் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் திறக்கப்பட்ட நிலையில், தென் மாவட்டங்களுக்கான விரைவுப் பேருந்துகள் அங்கிருந்தே இயக்கப்படுகின்றன. இந்நிலையில் வரும் 24ம் தேதியுடன் ஆம்னி பேருந்துகளையும் மாநகர பகுதிக்குள் இருந்து இயக்கக் கூடாது என போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் போல், தாம்பரம் வரதராஜபுரம் அருகே புதிய ஆம்னி பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. எனினும் அதன் கட்டுமானப் பணிகள் நடந்து வருவதால் புதிய ஆம்னி பேருந்து நிலையம் தயாராகும் வரையாவது, ஆம்னி பேருந்துகளை கோயம்பேட்டில் இருந்து இயக்குவதற்கு போக்குவரத்து துறை அனுமதிக்க வேண்டுமென ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது:

கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க தேவையான வசதிகளை அரசு செய்து தர வேண்டும். முடிச்சூர் பைபாஸ் சாலை அருகே இதற்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 700, 800 பஸ்களை நிறுத்துவதற்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தை தயார் செய்து தர வேண்டும். ஆம்னி பஸ்களை நிறுத்தி இயக்குவதற்கு இடம் தயார் செய்து தரும் வரை கோயம்பேட்டில் இருந்து இயக்க அனுமதிக்க வேண்டும். அதனால் அரசு சிறிது காலம் அவகாசம் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது, ‘‘ஆம்னி பேருந்துகள் மட்டும் கோயம்பேட்டில் இருந்து இயக்கும் பட்சத்தில், அரசு பேருந்துகளுக்கு இழப்பு ஏற்படும். மேலும் சென்னைக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்கவே விழுப்புரம் வழியில் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகிறது. அது ஆம்னி பேருந்துகளுக்கும் பொருந்தும்’’ என்றனர்.

The post கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க கால அவகாசம் வேண்டும்: உரிமையாளர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Klambach ,CHENNAI ,Omni ,Kalyankar Centenary Bus Terminal ,Klambakan ,Dinakaran ,
× RELATED பௌர்ணமியை முன்னிட்டு நாளை திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்