×

குஜராத்தில் சுற்றுலா சென்ற இடத்தில் சோகம் படகு கவிழ்ந்து 14 மாணவர்கள் பலி: ஏரியில் மூழ்கி 2 ஆசிரியர்களும் இறந்தனர்

வதோதரா: குஜராத்தில் ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் சுற்றுலா சென்ற பள்ளி மாணவர்கள் 14 பேர் பரிதாபமாக இறந்தனர். ஏரியில் மூழ்கிய 2 ஆசிரியர்களும் பலியாகினர். குஜராத்தின் வதோதராவில் உள்ள ஹர்னி மோத்நாத் ஏரிக்கு பள்ளி மாணவர்கள் நேற்று சுற்றுலா சென்றனர். மாலையில், ஏரியை சுற்றிப் பார்க்க 27 மாணவர்களும், 4 ஆசிரியர்களும் படகில் பயணித்ததாக கூறப்படுகிறது. அப்போது அதிக பாரம் தாங்காமல் படகு ஏரியில் கவிழ்ந்தது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

தேசிய பேரிடர் மீட்பு படையினரும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக மீட்புப் பணியில் இறங்கியது. ஏரியில் மூழ்கிய மாணவ, மாணவிகளை மீட்ட அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்தில் 14 மாணவர்களும், 2 ஆசிரியர்களும் ஏரியில் மூழ்கி சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 10 மாணவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், ஏரியில் மூழ்கிய சிலரை தேடும் பணி இரவு முழுவதும் நடந்தது.

விபத்து குறித்து இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், ‘வதோதராவில் உள்ள ஹர்னி ஏரியில் படகு கவிழ்ந்து ஏற்பட்டுள்ள உயிரிழப்பு வேதனை தருகிறது. துயரமான இந்த சமயத்தில் என் எண்ணங்கள் பலியானோரின் குடும்பத்தினருடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளாட்சி நிர்வாகம் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது’ என கூறி உள்ளார். மேலும், பலியானோரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரண நிதியை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதே போல, குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல் பலியானோர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரண உதவியை அறிவித்துள்ளார்.

The post குஜராத்தில் சுற்றுலா சென்ற இடத்தில் சோகம் படகு கவிழ்ந்து 14 மாணவர்கள் பலி: ஏரியில் மூழ்கி 2 ஆசிரியர்களும் இறந்தனர் appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Vadodara ,Harni Mothnath Lake ,Vadodara, Gujarat ,Dinakaran ,
× RELATED குஜராத்தில் கார் மீது லாரி மோதி 10 பேர் பலி