×

மண்டல, மகரவிளக்கு காலம் நிறைவடைகிறது சபரிமலையில் நாளை வரை பக்தர்களுக்கு அனுமதி: 21ம் தேதி நடை அடைப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 21ம் தேதி காலை சாத்தப்படும். நாளை (20ம் தேதி) இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். சபரிமலையில் இவ்வருட மண்டல, மகரவிளக்கு காலம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 15ம் தேதி மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் முடிந்த பின்னரும் சபரிமலையில் பக்தர்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றனர். நாளையுடன் மண்டல, மகரவிளக்கு காலம் நிறைவடையும். நாளை இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இன்றுடன் நெய்யபிஷேகம் நிறைவடையும். மண்டல, மகரவிளக்கு காலத்தின் கடைசி நாள் நெய்யபிஷேகம் என்பதால் இன்று பக்தர்கள் அதிக அளவில் சபரிமலை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருவாபரணம் அணிந்த ஐயப்பனை நேற்று இரவு வரை பக்தர்கள் தரிசித்தனர். 21ம் தேதி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும் 5.30 மணியளவில் திருவாபரணம் பந்தளத்திற்கு திருப்பி அனுப்பி வைக்கப்படும். தொடர்ந்து காலை 6 மணியளவில் சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். அன்று பந்தளம் மன்னர் குடும்பத்தை சேர்ந்தவருக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி உண்டு. நடையை சாத்தி முடித்த பின்னர் பந்தளம் மன்னர் பிரதிநிதியிடம் மேல்சாந்தி சபரிமலை கோயில் சாவியை ஒப்படைப்பார். இதன்பின் அடுத்த ஒரு வருடத்திற்கு சபரிமலையில் பூஜைகளை நடத்த வேண்டும் என்று கூறி அந்த சாவியையும், பணக்கிழியையும் மேல்சாந்தியிடம் பந்தளம் மன்னர் பிரதிநிதி கொடுப்பார். இதன்பின் மன்னர் பிரதிநிதி 18ம் படி வழியாக இறங்கி பந்தளத்திற்கு புறப்பட்டு செல்வார். மீண்டும் மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை பிப்ரவரி 13ம் தேதி திறக்கப்படும்.

The post மண்டல, மகரவிளக்கு காலம் நிறைவடைகிறது சபரிமலையில் நாளை வரை பக்தர்களுக்கு அனுமதி: 21ம் தேதி நடை அடைப்பு appeared first on Dinakaran.

Tags : Mandal ,Makaravilakku ,Sabarimala ,Thiruvananthapuram ,Sabarimala Ayyappan temple ,
× RELATED சபரிமலையில் நெரிசலை குறைக்க உடனடி முன்பதிவு ரத்து