×

ஆதம்பாக்கம் தில்லை கங்காநகரில் பயங்கரம் பறக்கும் ரயில் மேம்பாலம் சரிந்து விபத்து: நடைபயிற்சி சென்றவர்கள் மயிரிழையில் உயிர் தப்பினர்

சென்னை: ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில் பறக்கும் ரயில் மேம்பாலம் சரிந்து விழுந்தது. இதில் அங்கு நடைபயிற்சி சென்றவர்கள், பொதுமக்கள் மயிரிழையில் உயிர் தப்பினர். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், விரைவான போக்குவரத்துக்காகவும் சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரையிலான பறக்கும் ரயில் திட்டம் கடந்த 1997ல் தொடங்கியது. இந்த திட்டம் 3 கட்டங்களாக நடந்து 2007ல் மக்களின் பயன்பாட்டிற்கு வந்தது. தொடர்ந்து, 3ம் கட்டமாக 2008ம் ஆண்டு ரூ.495 கோடியில் வேளச்சேரி- பரங்கிமலை இடையே 5 கிலோ மீட்டர் தூரத்தில் பறக்கும் ரயில்பாதை அமைக்கும் பணி தொடங்கியது.

இதில், 4.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு 167 தூண்களுடன் ரயில் பாதை அமைக்கப்பட்டது. இந்நிலையில், ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதியில் நிலம் கையகப்படுத்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனால், ஆதம்பாக்கம் -பரங்கிமலை இடையே எஞ்சியுள்ள 500 மீட்டர் தூரத்திற்கான பணிகள் அப்படியே முடங்கியது. இதனால் 2007ல் இருந்து பறக்கும் ரயில் சென்னை கடற்கரை-வேளச்சேரி வரை மட்டுமே இயக்கப்படுகிறது. வேளச்சேரி-பரங்கிமலை இடையிலான பணிகள் 2010ல் நிறைவடையாததால், திட்ட மதிப்பீடு உயர்ந்தது.

அதனை தொடர்ந்து நிலம் கையகப்படுத்த நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்பட்டு நஷ்ட ஈடுகள் வழங்கபட்ட பின் பணிகள் கடந்த ஆண்டு முதல் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில், தில்லை கங்காநகர் பகுதியில் இருந்து பரங்கிமலை வரை நிறுத்தப்பட்ட 500 மீட்டர் தூரத்திற்கான பணிகள் துரிதமாக நடந்து வந்தது. வரும் ஜூன் மாதத்தில் பறக்கும் ரயில்சேவை தொடங்கும் என அறிவித்த நிலையில், தில்லை கங்கா நகர் பகுதியில் ராட்சத தூண்களில் 300 டன் எடை கொண்ட சிமென்ட் படுக்கைகளை (மேம்பாலம்) பொருத்தும் பணி பகுதி பகுதியாக நடந்து வருகிறது.

அதன்படி, நேற்று மாலை 6.15 மணி அளவில் இரு தூண்களுக்கு இடையே ராட்சத சிமென்ட் படுக்கைகளை ஹைட்ராலிக் முறையில் தூக்கி நிலை நிறுத்திக் கொண்டிருந்தனர். மேல்தளத்தின் தூண்களில் ஒரு பகுதியை நிறுத்திவிட்டு மற்ற பகுதியில் பாரம் தாங்கிகளை வைத்துவிட்டு பணியாளர்கள் டீ குடிப்பதற்காக அருகில் உள்ள கடைக்குச் சென்றுவிட்டனர். அந்த நேரத்தில் ஏராளமான வாகனங்கள் அங்கு சென்றுகொண்டிருந்தன. நடைபாதையில் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் நடைபயிற்சி சென்ற வண்ணம் இருந்தனர். சில அடி தூரத்தில் உள்ள குடியிருப்புகளின் வெளியே சிறுவர்கள் ஓடி ஆடி விளையாடிக்கொண்டிருந்தனர்.

அப்போது, யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பறக்கும் ரயில் தூண்களை அணைத்தபடி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 300 டன் எடை கொண்ட ராட்சத சிமென்ட் படுக்கைகள் (மேம்பாலம்) பாரம் தாங்கிகளை அழுத்தியதால் அவை அனைத்தும் ஒன்றோடு ஒன்றாக பலமாக மோதி வலுவிழந்து பயங்கர சத்தத்துடன் நொறுங்கின. 300 டன் எடை கொண்ட 131 அடி நீள ராட்சத கான்கிரீட் கர்டர் சினிமாவில் மலை சரிவது போல் சரிந்தது. அப்போது சாலையில் புழுதி காற்றுடன் நடைபாதையில் உள்ள கிரானைட் சிலாப்புகள் உடைந்து சுக்கு நூறானது.

நடைபயணம் மேற்கொண்டவர்கள், விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். அதிர்ஷ்டவசமாக அவர்கள் மயிரிழையில் உயிர் தப்பினர். அருகில் உள்ள கடை, வீடுகளில் உள்ள பாத்திரங்கள் சரிந்து பூகம்பம் ஏற்பட்டது போன்ற சூழல் நிலவியது. வீட்டில் இருந்தவர்கள் அச்சத்தில் மெதுவாக வெளியே வந்து எட்டிப் பார்த்தபின் பெருமூச்சு விட்டனர்.

இந்த சம்பவத்தால் பணியாளர்களுக்கோ, பொதுமக்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்ததும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பறக்கும் ரயில் திட்ட உதவி பொதுமேலாளர் மிதுல் கிஷோர், தென்சென்னை போலீஸ் இணை கமிஷனர் சிபி சக்கரவர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post ஆதம்பாக்கம் தில்லை கங்காநகரில் பயங்கரம் பறக்கும் ரயில் மேம்பாலம் சரிந்து விபத்து: நடைபயிற்சி சென்றவர்கள் மயிரிழையில் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.

Tags : Adambakkam Thillai Ganganagar ,CHENNAI ,Adampakkam Thillai Ganga Nagar ,Chennai beach ,Velachery ,Aadhampakkam ,Thillai ,Ganganagar ,Mayirijha ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...