×

2014ல் ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே மாநிலங்களுக்கு வரி பகிர்வை குறைக்க பிரதமர் மோடி முயற்சி: நிதி ஆயோக் தலைவர் பரபரப்பு  குற்றச்சாட்டு

புதுடெல்லி: கடந்த 2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த உடனேயே மாநிலங்களுக்கான நிதியை குறைக்கும் வகையில் வரிப் பகிர்வு அளவை குறைக்குமாறு நிதிக்குழுவை பிரதமர் நரேந்திர மோடி நிர்பந்தித்ததாக, அப்போதைய பிரதமர் அலுவலக செயலாளரும், தற்போதைய நிதி ஆயோக் செயல் அதிகாரியுமான பி.வி.ஆர்.சுப்பிரமணியம் பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார். மாநிலங்களுக்கான வரிப் பகிர்வை ஒன்றிய அரசு முறையாகத் தருவதில்லை எனவும்; தாமதம் செய்கிறது எனவும் பல்வேறு மாநிலங்களால் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ஜிஎஸ்டி அமல்படுத்திய பிறகு மாநிலங்கள் நிதித் தேவைக்கு ஒன்றிய அரசிடம் கையேந்த வேண்டிய நிலைதான் உள்ளது. இதனால், மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த முடியாமல் மாநில அரசுகள் தவிக்கின்றன. குறிப்பாக எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் வஞ்சிக்கப்படுவதாக பல்வேறு அரசியல் கட்சியினரும் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், மாநிலங்களுக்கான நிதியை குறைக்கும் வகையில் வரிப் பகிர்வை குறைக்க நிதிக் குழுவிடம் பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை பிரதமர் அலுவலக செயலாளரும், தற்போதைய நிதி ஆயோக் செயல் அதிகாரியுமான பி.வி.ஆர்.சுப்பிரமணியம் தான் தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னரும், அப்போதைய நிதிக்கமிஷன் தலைவருமான ஒய்.வி.ரெட்டி, 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வு தொடர்பாக ஒரு பரிந்துரையை சமர்ப்பித்திருந்தார். அதில், மாநிலங்களுக்கான வரிப் பகிர்வை 32 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். ஆனால், வரிப் பகிர்வை 33 சதவீதமாக குறைக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியதாக பி.வி.ஆர்.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். சமூக மற்றும் பொருளாதார முன்னேற்ற மையம் (சிஎஸ்இபி) ஏற்பாடு செய்திருந்த இந்தியாவில் நிதி அறிக்கை குறித்த கருத்தரங்கில் பேசியபோது சுப்பிரமணியம் இந்த தகவலைப் பகிர்ந்து கொண்டார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள தகவல் வருமாறு: மாநிலங்களுக்கு நிதியை குறைக்கும் வகையில் வரிப் பகிர்வை குறைக்க வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார். ஆனால், நிதி குழு தலைவர் ஒய்.வி.ரெட்டி அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. இது தொடர்பாக நிதிக் குழு தலைவரிடம் பிரதமர் மோடி 2 மணி நேரம் பேசிப்பார்த்தார். அந்த பேச்சுவார்த்தையின்போது நானும் இருந்தேன். ஏனெனில், அரசியலமைப்பு விதிகளின்படி அரசுக்கு 2 வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. ஒன்று, நிதி கமிஷன் பரிந்துரைகளை ஏற்பது. அல்லது அதனை நிராகரித்து ஒரு புதிய ஆணையத்தை நிறுவுவது. ஆனால், வேறு வழியில் நிதி கமிஷனிடம் நிர்பந்தம் செய்வதோ பேச்சுவார்த்தை நடத்தவோ முடியாது என்பதுதான்.

ஆனால், ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த நிதிக் குழு தலைவர் ஒய்.வி.ரெட்டியிடம் வருவாய் பங்கு குறித்த தனது பரிந்துரைகளை குறைக்க பிரதமர் முயன்றார். இருவருக்குமான அந்த பேச்சுவார்த்தை என் மூலம்தான் நடைபெற்றது என சுப்பிரமணியம் கூறியுள்ளார். மாநிலங்களுக்கான நிதியை பிரதமர் மோடி குறைக்க முயற்சி செய்தார் என்று ஒரு அதிகாரியே ஒப்புக் கொண்டிருப்பது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நிதி ஆயோக் செயல் அதிகாரியின் குற்றச்சாட்டு குறித்து ஒன்றிய அரசின் தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. அதே நேரத்தில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ஒன்றிய அரசை கடுமையாக சாடியுள்ளார்.

* ‘உங்க பாஸ் கிட்ட சொல்லுங்கப்பா…’
சுப்பிரமணியம் கூறுகையில்,‘‘பிரதமர் பேசிய பிறகும் ரெட்டி தனது நிலைப்பாட்டில் இருந்து நழுவி விட்டுக் கொடுக்கப்பதாக இல்லை. அவர் என்னிடம், ‘‘உங்க பாஸ் கிட்ட சொல்லுங்கப்பா.. அவருக்கு வேற வழியே கிடையாது’’ என கூறியதாக சுப்பிரமணியம் கூறியுள்ளார். பட்ஜெட் தயாரிப்பு 2 நாள் திட்டங்களுக்கு நிதி பாதியானது ‘‘வரிப்பகிர்வு குறைக்க வழியில்லாததால், பட்ஜெட் இரண்டே நாளில் போடப்பட்டு விட்டது. 4 பேர் அமர்ந்து முழு பட்ஜெட்டையும் மாற்றியமைத்தோம். பெண்கள் மற்றும் குழந்தைகள் திட்டத்துக்கு ரூ.36,000 கோடி ரூ.18,000 கோடியாக குறைக்கப்பட்டது’’ என்றார்.

* முதல்ல அப்படி… அப்புறம் இப்பிடி…
14-வது நிதி கமிஷன் 2013-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. அதே நேரத்தில், குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக நரேந்திர மோடி, பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டு, பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார், மேலும், ஒன்றிய வரிகளில் மாநிலங்களுக்கு 50 சதவீத பங்கை வழங்குமாறு ஆணையத்தை பிரசாரத்தில் வலியுறுத்தினார். ஆனால், பிரதமராக வந்ததும் மாநில நிலையை குறைப்பதற்கான செயலில் இறங்கிய தகவல் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

* செஸ் வரி அதிகரிப்பு
காங்கிரஸ் தலைமையிலான ஒன்றிய அரசு இருந்தபோது, 2011-12ஆம் ஆண்டு வரி வசூலில் செஸ் மற்றும் கூடுதல் கட்டணங்களின் பங்கு 10.4 சதவீதமாக இருந்தது. ஆனால், பாஜ தலைமையிலான ஆட்சி வந்த பிறகு, ஒன்றிய அரசு வசூலித்த மொத்த வரியில் செஸ் மற்றும் கூடுதல் கட்டண பங்களிப்பு 18.4 சதவீதமாகி விட்டது . இதில் மாநிலங்களுக்கு பங்கு எதுவும் கிடைக்காது

* நிதிக்கமிஷன் மறுத்ததால் ஜிஎஸ்டி மூலம் சாதித்தது
மாநிலங்களுக்கான வரி ஆதாரத்தை அழிப்பதற்கான ஒரு வழியாக ஜிஎஸ்டியை ஒன்றிய பாஜ அரசு பயன்படுத்திக் கொண்டுள்ளது. 2017 ஜூலையில் ஜிஎஸ்டி அறிமுகமான பிறகு, மாநில வரிகள் இதில் ஒருங்கிணைக்கப்பட்டன. இதன் காரணமாக மாநிலங்கள் வருவாய் குறைந்து திணறி வருவதாக சுப்பிரமணியம் குறிப்பிட்டுள்ளார். சமீபத்திய ஒரு ஆய்வறிக்கையின்படி, ஜிஎஸ்டிக்கு முந்தைய காலகட்டத்துடன் ஒப்பிடும்போது ஜிஎஸ்டிக்கு பிந்தைய மாநில வரி வருவாய் குறைந்துள்ளது என தெரிய வந்துள்ளது.

* இன்னொரு ஹிண்டன்பர்க்
அதானி குழுமத்தின் மீது பங்குச் சந்தை மோசடி, பண மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டிருந்தது. இது பற்றி குறிப்பிட்ட சுப்பிரமணியம், பட்ஜெட் அறிக்கைகளில் உண்மையை மறைக்கும் வகையில் பல அடுக்குகளால் மூடப்பட்டுள்ளன. ஒன்றிய அரசாங்கத்தின் கணக்குகள் வெளிப்படையாக இருந்தால் அது ஹிண்டன் பர்க் விவகாரம் போல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் என்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.

* அம்பலமாக்கிய வீடியோ விளக்கம் கேட்டதால் நீக்கம்
சுப்பிரமணியம் பேசிய இந்த வீடியோ சிஎஸ்இபியின் யூடியூப் சானலில் நேரலையாக வெளியானதை 500 பேர் பார்த்துள்ளனர். அதை வைத்து ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ் என்ற அமைப்பு பிரதமர் அலுவலகத்துக்கு இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. அதன்பிறகு சிறிது நேரத்தில் அந்த வீடியோ யூ டியூபில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. அதோடு அதற்கு பிரதமர் அலுவலகம் முறையான பதிலும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

The post 2014ல் ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே மாநிலங்களுக்கு வரி பகிர்வை குறைக்க பிரதமர் மோடி முயற்சி: நிதி ஆயோக் தலைவர் பரபரப்பு  குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Modi ,Niti Aayog ,New Delhi ,Narendra Modi ,Finance Commission ,Prime Minister's Office ,PVR ,Subramaniam ,Dinakaran ,
× RELATED பாஜவின் கோட்டைகளிலும் மோடிக்கு ஏன் பயம்?