×

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் 81 அடி மேடை, 125 அடி உயர அம்பேத்கர் சிலை நாளை திறப்பு: அனைவரும் பங்கேற்க முதல்வர் ஜெகன்மோகன் அழைப்பு

திருமலை: விஜயவாடாவில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான அம்பேத்கர் சிலையை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் நாளை திறக்கிறார். ஆந்திர மாநில அரசு சார்பில் விஜயவாடாவில் உலகில் மிக உயரமான அம்பேத்கர் சிலை, பீடத்துடன் அமைக்கும் பணி கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன்படி இப்பணி முடிவடைந்துள்ளது. 81 அடி உயர மேடை, 125 அடி உயர உலகின் மிக பிரம்மாண்டமான அம்பேத்கர் சிலை மண்டபத்துடன் அமைக்கப்பட்டது. இந்த மண்டபத்தில் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையிலான புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதையடுத்து சிலையை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் நாளை திறந்து வைக்கிறார். இதில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்பட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.

இதுகுறித்து ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: விஜயவாடாவில் நாம் அமைத்த அம்பேத்கரின் மாபெரும் சிலை நமது மாநிலத்தின் அடையாளம் மட்டுமல்ல, நாட்டின் அடையாளமும் ஆகும். இதுதான் ‘சமூக நீதியின் சிலை’. வரும் 19ம்தேதி (நாளை) வரலாற்று சிறப்பு மிக்க விழா சுயராஜ்ய மைதானத்தில் சிலை திறக்கப்பட உள்ளது. இந்த சிலை, நாட்டிலேயே மட்டுமின்றி, உலகிலேயே மிகப்பெரிய அம்பேத்கரின் சிலை ஆகும். 125 அடி சிலை, 81 அடி மேடையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 206 அடி உயர சிலையாகும். அந்த மாமனிதரின் ஆளுமை, இந்நாட்டின் சமூகம், நீதி, அரசியல் என ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு முன்பு அவர் வெளிப்படுத்திய உணர்வுகள், பெண்களின் வரலாற்றை மாற்றியமைக்க, நம் நாட்டில் என்றென்றும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

பொறுப்புடன், அவரது உணர்வுகளில் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் அவர் காட்டிய வழியில் அவற்றை பின்பற்றும் அரசு என்ற வகையில், இச்சிலை திறப்பு விழா நடைபெறும். இதில் அனைவரும் முன்வந்து பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தாழ்த்தப்பட்டோருக்கு கல்வியைக் கொண்டு சென்ற மாபெரும் மனிதர். தீண்டாமைக்கும் ஆதிக்க கருத்தியலுக்கும் எதிராக கிளர்ந்தெழுந்த மாபெரும் மனிதர். சமத்துவ சமுதாய உணர்வுகளின் உருவம். அரசியலமைப்பு மற்றும் அரசியலமைப்பு உரிமைகள் மூலம் நம்மை தொடர்ந்து பாதுகாக்கும் ஒரு பெரிய சக்தி. ஒவ்வொரு மனிதரிலும் அவரது சிலை தாழ்த்தப்பட்டவர்களுக்கு தொடர்ந்து தைரியத்தையும் வலிமையையும் தரும் ஒரு சிறந்த உத்வேகம் ஆகும். தலித்துகளுடன் சேர்ந்து ஜாதி, மத வேறுபாடின்றி, அனைத்து ஏழைகளின் வாழ்விலும் இந்த 77 ஆண்டுகளில் வந்துள்ள பல மாற்றங்களுக்கு ஆதாரம் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் உணர்வுகள்.

நாங்கள் அவரை மிகவும் மதிக்கிறோம். இப்போது, ​​நமது விஜயவாடாவில் திறக்கப்படும் இந்த மாபெரும் சிற்பம் நம் மாநில வரலாற்றில் பொன் எழுத்துக்களால் நிலைத்து நிற்கும் என்பது மட்டுமல்ல, பல நூறு ஆண்டுகள் வரலாற்றில் நிலைத்து இருக்கும். இது சமத்துவத்தை நோக்கிய நமது சமூகத்தின் போக்கை மாற்றுவதற்கும், சமூகத்தை சீர்திருத்துவதற்கும், அற்ப உணர்வுகளுக்கு எதிராக கிளர்ச்சி செய்வதற்கும், ஏழைகளின் நிலையை அரசு அதிகாரத்தில் நிலை நிறுத்துவதற்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் 81 அடி மேடை, 125 அடி உயர அம்பேத்கர் சிலை நாளை திறப்பு: அனைவரும் பங்கேற்க முதல்வர் ஜெகன்மோகன் அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Ambedkar ,AP ,Vijayawada ,Jeganmohan ,AP state government ,Jehanmohan ,
× RELATED விஜயவாடா நகரில் தாய், மனைவி 2 பிள்ளைகளை...