×

பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகள் சரணடைய கூடுதல் அவகாசம் கேட்டு மனு: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை

புதுடெல்லி: பிஸ்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகள் சரணடைய கூடுதல் அவகாசம் கேட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது. குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ம் ஆண்டு நடந்த கோத்ரா தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் அப்போது நடந்த வன்முறையில் 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டும், அவரது குடும்பத்தை சேர்ந்த 14 பேர் கொடூரமாக கொல்லப்படவும் செய்தனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் சிறை நன்னடத்தையை அடிப்படையாக கொண்டு குற்றவாளிகள் 11 பேரையும் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி குஜராத் அரசு விடுதலை செய்து அறிவித்தது.

இதைத்தொடர்ந்து கோத்ரா வன்முறையின்போது பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணான பில்கிஸ் பானு தொடர்ந்த ரிட் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகிய அமர்வு, ‘பில்கிஸ் பானு விவகாரத்தில் 11 குற்றவாளிகளின் முன் விடுதலையை ரத்து செய்ததோடு, இதில் தலையிட குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை’ என கடந்த 8ம் தேதி உத்தரவிட்டிருந்தது. மேலும் விடுதலை செய்யப்பட்ட 11 குற்றவாளிகளும் 2 வாரத்தில் சிறையில் சரணடைய வேண்டும் என தீர்ப்பளித்திருந்தனர். இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா அமர்வில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.சித்தம்பரீஷ் ஒரு கோரிக்கை வைத்தார். அதில், ‘பில்கிஸ் பானு வழக்கின் 3 குற்றவாளிகள் தரப்பில் ஆஜராகி உள்ளேன். அவர்கள் சரணடைய உச்ச நீதிமன்றத்தால் கொடுக்கப்பட்ட அவகாசம் 21ம் தேதியுடன் முடிவடைகிறது.

அவர்களின் குடும்ப சூழ்நிலை மற்றும் உடல்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு சிறையில் சரணடைய அவர்களுக்கு குறைந்தபட்சம் 4 வாரம் அவகாசம் வழங்க வேண்டும்’ என்றார். இதையடுத்து வழக்கை நாளை பட்டியலிடுவதாக உத்தரவிட்ட நீதிபதி, இந்த விவகாரம் தொடர்பாக தலைமை நீதிபதியிடம் ஆலோசித்து முடிவு எடுக்குமாறு பதிவு அலுவலகத்திற்கு பரிந்துரைத்தார்.

The post பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகள் சரணடைய கூடுதல் அவகாசம் கேட்டு மனு: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை appeared first on Dinakaran.

Tags : Bilkis ,Supreme Court ,New Delhi ,Biskis Banu ,2002 Godhra attack ,Gujarat ,Bilkis Banu ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு