×

பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட மும்பை அடல் கடல் பாலத்தில் சுங்க கட்டணம் அதிகம்: சாமானிய மக்கள் கடும் அவதி

* காரில் ஒருமுறை பயணிக்க ரூ250, மினி பஸ் ரூ400
* தினசரி பாஸ் ரூ625 கட்டணம்;

மும்பை: பிரதமர் மோடி திறந்து வைத்த மும்பை அடல் பாலத்தில் சுங்க கட்டணம் அதிகம் உள்ளதால் சாமானிய மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். காரில் ஒருமுறை பயணிக்க ரூ.250, மினி பஸ் ரூ.400, தினசரி பாஸ் ரூ.625 கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த 2016ம் ஆண்டு பிரதமர் மோடியால் கடல் பாலம் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த பாலம் ரூ.17,840 கோடி செலவில் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் நீளம் 21.8 கிலோ மீட்டர். கடந்த 7 ஆண்டுகளாக முழு வீச்சில் பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்றது. பணிகள் முடிந்ததையடுத்து கடந்த 12ம் தேதி அடல் சேது பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த பாலத்தின் மூலம் மும்பையிலிருந்து நவி மும்பைக்கு செல்லும் நேரம் 2 மணி நேரத்தில் இருந்து வெறும் 20 நிமிடங்களாக குறைந்துள்ளது. மேலும், மும்பை சர்வதேச விமான நிலையம் மற்றும் நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தை இது இணைக்கிறது. இந்த கடல்வழி பாலத்துக்கு ‘அடல் சேது’ என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த பாலம் 6 வழிச்சாலையாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் பைக்குகள், 3 சக்கர வாகனங்கள், டிராக்டர்கள் மற்றும் மெதுவாக செல்லும் வாகனங்களுக்கு அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் செல்ல வாகனங்களுக்கு கட்டணமும் அதிகளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் அதிருப்தி தெரிவித்தனர். அதாவது, கார்கள் ஒருமுறை பயணிக்க ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். திரும்பி வரும் (ரிட்டன்) பயணத்திற்கும் சேர்த்து என்றால் ரூ.375 கட்டணம் வசூலிக்கப்படும். தினசரி பாஸ் என்றால் ரூ.625, மாதாந்திர பாஸ் ரூ.12,500 கட்டணமாக வசூலிக்கப்படும். மினி பஸ்களுக்கு ஒருமுறை பயணிக்க ரூ.400, திரும்பி வரும் பயணத்திற்கு ரூ.600 கட்டணமாகும். அதேபோல தினசரி பாஸ் என்றால் ரூ.1,000, மாதாந்திர பாஸ் என்றால் ரூ.20,000 கட்டணமாக செலுத்த வேண்டும்.

பஸ்களுக்கு ஒரு முறை பயணம் செய்ய ரூ.830 கட்டணமாக செலுத்த வேண்டும். மாதாந்திர பாஸ் என்றால் ரூ.41,500 கட்டணம். கனரக லாரிகள் 3 அச்சுக்கள் கொண்ட வாகனத்திற்கு ஒருமுறை பயணிக்க 905ம் 4-6 அச்சுக்கள் கொண்ட டிரக்குகள் என்றால் ரூ.1,300 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தை பற்றி கலைப்படாமல் பலர், இந்த பாலத்தில் பயணம் செய்ய பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அதே நேரத்தில் விதிகளை மீறி வாகன ஓட்டிகள் ஆங்காங்கே கார்களை நிறுத்தி செல்பி எடுப்பது வேடிக்கை பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் சம்பவங்களும் அதிகரித்துள்ளது. போட்டோக்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்வது, ரீல்ஸ் எடுப்பது என சாலை விதிகளை மதிக்காமல் வாகன ஓட்டிகள் நடந்து கொள்வது விபத்தை ஏற்படுத்தும் அபாயத்தை அதிகரிக்கும் விதமாக உள்ளது.

இதனால், மும்பை போலீசார் தற்போது வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதாவது, அடல் சேது பாலத்தில் சட்ட விரோதமாக நிறுத்தி புகைப்படங்களை எடுத்தால் வழக்கு பதிவு செய்யப்படும் என்று எச்சரித்துள்ளனர். ஆட்டோ, பைக்குகள் இந்த பாலத்தில் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையிலும் ஆட்டோக்கள், டிராக்டர்கள், பைக்குகள் மற்றும் விலங்குகளால் இழுத்து செல்லப்படும் வண்டிகள் கூட இந்த பாலத்தில் செல்லும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், இந்த பாலத்தில் கட்டணம் பல மடங்கு இருப்பதாக பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சிவசேனா கட்சி எதிரப்பு தெரிவித்துள்ளது. அதாவது, ‘இந்த கட்டணம் என்பது மிகவும் அதிகம். சாமானிய மக்களால் அவ்வளவு பணம் கொடுத்து பயணிக்க முடியாது.

எனவே இந்த பாலத்தில் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளது. இதுகுறித்து அக்கட்சி எம்எல்ஏ ஆதித்யா கூறுகையில், வேலை வாய்ப்புகளை உருவாக்கும் தொழில்களை அண்டை மாநிலத்துக்கு அனுப்பிய பிறகு இந்த பாலத்திலாவது இலவசமாக பயணிக்க அனுமதியுங்கள். கட்டணத்தை மறுபரிசீலனை செய்யுங்கள். சாமானிய மக்களும் பயணிக்கும் வகையில் கட்டண உயர்வை கைவிடுங்கள்” என்றார். மேலும், பயண நேரம் குறைவு என்பதற்காக அனைத்து தரப்பினராலும் இந்த அதிக கட்டணத்தை செலுத்த இயலாது. எனவே கட்டணம் இல்லாமல் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்று சாமானிய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட மும்பை அடல் கடல் பாலத்தில் சுங்க கட்டணம் அதிகம்: சாமானிய மக்கள் கடும் அவதி appeared first on Dinakaran.

Tags : Mumbai Atal Sea Bridge ,Modi ,Mumbai ,Mumbai Atal Bridge ,Mumbai Atal ,Sea Bridge ,Dinakaran ,
× RELATED மும்பையில் கடல் சீற்றமாக இருக்கும்;...