திருவொற்றியூர்: ஈகிள் பிரஸ் நிறுவனர் பிரதாப் சிங் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கேட்டு வருந்தினேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பிரபல ஈகிள் டைரி நிறுவனர் எம்.ஜே.பிரதாப்சிங். வயது 93. இவர், உடல்நலகுறைவின் காரணமாக இன்று காலை காலமானார். 1931ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளத்தில் பிறந்த இவர், பள்ளி படிப்பு முடித்துள்ளார்.
1949ம் ஆண்டு சென்னை வந்து தனியார் அச்சகத்தில் பணியாற்றினார். அதன்பின் 1954ம் ஆண்டு ஈகிள் அச்சகத்தை தொடங்கி புகழ்பெற்ற ஈகிள் டைரியை வெளியிட்டார். ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய அச்சகமாக நடத்தி வந்தார். இவரது அச்சகத்தில் ஈகிள் டைரி உள்ளிட்ட பல்வேறு வங்கி காசோலைகள் தயார் செய்யப்படுகிறது. 1975ல் பூம்புகார் பதிப்பகத்தை தொடங்கினார்.
இந்த பதிப்பகத்தின் மூலம் இதுவரை 1300 தலைப்புகளுக்கு மேலான நூல்களை வெளியிட்டுள்ளார். பதிப்பகத்தில் வெளியிடப்பட்ட 3 நூல்களுக்கு சாகித்திய அகடாமி விருது கிடைத்துள்ளது. இவரது மகள் ஷீலா சத்யகுமார், இவரது கணவர் டாக்டர் டிபிடி.சத்தியகுமார், திருவொற்றியூர், குரோம்பேட்டை பகுதிகளில் சுகம் மருத்துவமனையை நடத்தி வருகின்றனர். இன்று மாலை 3.30 மணிக்கு சென்னை கோபாலபுரம் சிஎஸ்ஐ செயின்ட் ஜார்ஜ் கதிட்ரல் சர்ச்சில் எம்.ஜே.பிரதாப்சிங்கின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
* ஈகிள் பிரஸ் நிறுவனர் மறைவுக்கு முதல்வர் இரங்கல்
ஈகிள் பிரஸ் நிறுவனர் பிரதாப் சிங் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கேட்டு வருந்தினேன். தலைவர் கலைஞரோடும் எங்கள் குடும்பத்தோடும் நட்பு பாராட்டிய அவரது இழப்பு வேதனை தருகிறது. பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் உள்ளிட்ட தமிழ் ஆளுமைகளின் நூல்களை வெளியிட்டுப் பூம்புகார் பதிப்பகத்தைத் தமிழ்க் கருவூலமாக நடத்தியவர் பிரதாப் சிங் அவர்கள்.
அவரது பிரிவால் வாடும், அவரது குடும்பத்தினர் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மகனும் எனது இனிய நண்பருமான ராஜா சுந்தர்சிங் அவர்களுக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொண்டேன்.
The post ஈகிள் பிரஸ் நிறுவனர் பிரதாப் சிங் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.