×

ஆந்திர சட்டமன்ற இடைத்தேர்தலில் போலி வாக்காளர்கள் சேர்ப்பு கலெக்டர் அதிரடி சஸ்பெண்ட்: தேர்தல் ஆணையம் உத்தரவு


திருமலை: ஆந்திர சட்டமன்ற இடைத்தேர்தலின்போது போலி வாக்காளர்களை சேர்த்து, அடையாள அட்டைகளை பதிவிறக்கம் செய்தது தொடர்பாக கலெக்டரை சஸ்பெண்ட் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் விரைவில் மக்களவை தேர்தலுடன் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் விறுவிறுப்பாக தயாராகி வருகின்றனர். எம்எல்ஏக்கள், முக்கிய பிரமுகர்களை ஒவ்வொரு கட்சியும் தங்களது கட்சிக்கு இழுக்கும் படலமும் வேகமாக நடத்து வருகிறது. கூட்டணி பேச்சு வார்த்தைகளும், கட்சிகளை தங்களது கூட்டணிக்குள் இழுக்கும் சம்பவமும் நடந்து வருகிறது. அதேபோல் தேர்தல் ஆணையம் சார்பில் ேதர்தலுக்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.

இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் சேர்க்கையில் முறைகேடு நடப்பதாக முக்கிய கட்சிகள் ஒருவர் மீது ஒருவர் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்து வருகின்றனர். இந்த புகார்களை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில் கடந்த இடைத்தேர்தலின்போது அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக கலெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அதன் விவரம்: கடந்த 2021ம் ஆண்டு திருப்பதி சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. அப்போது திருப்பதி மாநகராட்சி ஆணையராக பணியாற்றியவர் கிரிஷா. இவர் தற்போது அன்னமய்யா கலெக்டராக உள்ளார். இவர் இடைத்தேர்தலின்போது ஆளுங்கட்சி தலைவர்களுடன் சேர்ந்து முறைகேடாக போலி வாக்காளர்களை பட்டியலில் சேர்த்ததாக புகார் எழுந்தது. மேலும் அவர், தனது லாக் இன் ஐடி மூலம் 30,000க்கும் மேற்பட்ட வாக்காளர் அட்டைகளை சட்டவிரோதமாக பதிவிறக்கம் செய்ததாகவும் எதிர்கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வந்தது. அதில் அதிகாரி கிரிஷா முறைகேடாக வாக்காளர் அட்டைகளை பதிவிறக்கம் செய்தது உறுதியானது. இதையடுத்து சமீபத்தில் விஜயவாடாவில் நடந்த தேர்தல் ஆணையத்தின் உயரதிகாரிகள் கூட்டத்தில், கிரிஷா கடுமையாக கண்டிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது கலெக்டராக பணிபுரியம் கிரிஷாவை சஸ்பெண்ட் செய்து தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டுள்ளது. மேலும் இதேபோல் கார்டுகளை பதிவிறக்கம் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், அவர்களின் விவரங்களை அனுப்புமாறு மாநில தலைமை தேர்தல் அதிகாரி முகேஷ்குமார்மீனாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பாஜக தரப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்போது கலெக்டர் கிரிஷாவை தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கலெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ஆந்திர சட்டமன்ற இடைத்தேர்தலில் போலி வாக்காளர்கள் சேர்ப்பு கலெக்டர் அதிரடி சஸ்பெண்ட்: தேர்தல் ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : AP ,Thirumalai ,Election Commission ,AP assembly midterm elections ,Lok Sabha elections ,Dinakaran ,
× RELATED ஆந்திர மாநிலத்தில் வாக்கு...