×

ஆவடி 40வது வார்டில் துருப்பிடித்து வீணாகும் பூங்கா உடற்பயிற்சி கூடம்: சீரமைத்து திறக்க வலியுறுத்தல்

ஆவடி: ஆவடி மாநகராட்சி, 40வது வார்டில் கடந்த ஓராண்டுக்கு முன் ரூ11 லட்சம் மதிப்பில் பொழுதுபோக்கு பூங்கா கட்டப்பட்டும், இதுவரை மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை. இதனால் அங்குள்ள திறந்தவெளி உடற்பயிற்சி கூடத்தில் அனைத்து கருவிகளும் துருப்பிடித்து வீணாகி வருகின்றன. இப்பூங்காவை உடனடியாக சீரமைத்து, மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 40வது வார்டான தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பின் 4வது பிளாக் உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு எம்.ஜி.ஆர். நகர் சாலையோரத்தில் நீண்ட காலமாக குப்பை கொட்டப்பட்டு வந்தது. மேலும், இச்சாலை அருகே திறந்தவெளி கழிவுநீர் கால்வாய் உள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றத்தினால் மக்களுக்கு பல்வேறு நோய்தொற்றுகள் பரவும் அபாயநிலை ஏற்பட்டது.

இந்நிலையில், 40வது வார்டுக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர் சாலையோரத்தில் ரூ11 லட்சம் மதிப்பில் புதிதாக பொழுதுபோக்கு பூங்கா கட்டப்பட்டது. மேலும், அங்குள்ள திறந்தவெளி உடற்பயிற்சி கூடத்தில் அனைத்து கருவிகளும் பொருத்தப்பட்டு இருந்தன. எனினும், இந்த பொழுதுபோக்கு பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூட்டம் மக்களின் பயன்பாட்டுக்கு இதுவரை திறக்கப்படாமல், பூங்காவில் உள்ள செடிகள் பாழாகி வருகின்றன. மேலும், உடற்பயிற்சி கூடத்தில் உள்ள அனைத்து கருவிகளிலும் தூசி படிந்து, துருப்பிடித்து வீணாகி வருகின்றன. தற்போது உள்ளபடி பூங்கா திறக்கப்பட்டாலும், அங்குள்ள அதிநவீன உடற்பயிற்சி கருவிகள் உடல்நலன் பேணும் மக்களுக்கு பயனில்லாமல் போகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பூங்காவில் உடல்நலத்தை பேணும் வகையில் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சிகளை செய்ய முடியாமல் பலர் பரிதவித்து வருகின்றனர்.

எனவே, ஆவடி 40வது வார்டில் கடந்த ஓராண்டுக்கு முன் கட்டப்பட்ட பொழுதுபோக்கு பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூட்டத்தல் துருப்பிடித்து வீணான கருவிகளை அகற்றி சீரமைத்து, மீண்டும் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

The post ஆவடி 40வது வார்டில் துருப்பிடித்து வீணாகும் பூங்கா உடற்பயிற்சி கூடம்: சீரமைத்து திறக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Awady 40th Ward Rusty and Wasted Park Gymnasium ,Aavadi ,Ward 40 ,Aavadi Corporation ,Awadi 40th ward rusting and ,gym ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் அருகே ஆதிதிராவிடர் அரசு...