×

பொங்கலுக்கு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்புவதால் 27 கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல்: வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றதால் அவதி

செங்கல்பட்டு: பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊர் சென்ற மக்கள் 5 நாள் விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்புகின்றனர். ஒரே நாளில் புறப்பட்டு வந்ததால் செங்கல்பட்டு முதல் தாம்பரம் வரை 27 கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றதால் சிரமப்பட்டனர். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை முதல் நேற்று வரை தொடர்ந்து 5 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் தென்மாவட்டங்களான மதுரை, திருச்சி, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கையை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதலே புறப்பட்டு சென்றிருந்தனர்.

ரயில்கள், அரசு பேருந்துகள், ஆம்னி பஸ்களில் புறப்பட்டு சென்றனர். ஏராளமானோர் கார், பைக் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் சென்றனர். சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய 5 நாள் விடுமுறையை சொந்த ஊர்களில் கழித்துவிட்டு நேற்று மாலை கார், வேன், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மூலம் சென்னைக்கு புறப்பட்டனர். ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்னை நோக்கி வர தொடங்கியதால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. இதனால் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி, சிங்கப்பெருமாள் கோயில், மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, பெருங்களத்தூர், ஊரப்பாக்கம் பகுதிகளில் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. செங்கல்பட்டு முதல் தாம்பரம் வரை 27 கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அதிகளவில் கூட்டம் இருந்ததால் பலர் பேருந்து நிலையத்தில் இருந்து புறநகர் ரயில்நிலையங்களுக்கு சென்று ரயிலை பிடித்து வீடுகளுக்கு சென்றனர். வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் அவசர அவசரமாக ஆட்டோக்களில் சென்றனர். போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமத்துக்குள்ளாகினர். செங்கல்பட்டு எஸ்பி சாய்பிரணித், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இன்று காலை 11 மணி வரை போக்குவரத்து நெரிசல் நிலவியது. அதன்பிறகு நெரிசல் சீரானது.

பரனூர் சுங்கச்சாவடியில் 8 கவுன்டர்கள் திறப்பு
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் வாகனங்கள் சிரமமின்றி செல்ல வசதியாகவும் பரனூர் சுங்கச்சாவடியில் 8 கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. கூடுதல் கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளதால் ஓரளவு போக்குவரத்து நெரிசலின்றி மக்கள் வீடுகளுக்கு சென்றனர். ஆனால் பலர் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் மாணவ, மாணவிகளும் தவித்தனர்.

The post பொங்கலுக்கு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்புவதால் 27 கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல்: வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றதால் அவதி appeared first on Dinakaran.

Tags : Pongal ,Chennai ,Chengalpattu ,Pongal festival ,Tambaram ,
× RELATED செங்கல்பட்டு அல்லானூர் அருகே...