×

காணும் பொங்கலை முன்னிட்டு அலையாத்தி காட்டிற்கு சுற்றுலா வந்த பயணிகள் ஏமாற்றம்

*படகு கிடைக்காமல் திரும்பி சென்றனர்

முத்துப்பேட்டை : காணும் பொங்கலை முன்னிட்டு முத்துப்பேட்டை பகுதி அலையாத்தி காட்டிற்கு சுற்றுலா வந்த பயணிகள் ஏமாற்றமடைந்தனர். படகு கிடைக்காததால் ஊருக்கு திரும்பி சென்றனர். முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக்காடு மிகப்பெரிய பரபரபளவு கொண்டதாகும். இந்த அலையாத்திக்காடுகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்லும் ஆற்றின் வழியே படகில் நெடுந்தூரப் பயணம் செல்வது பயணிப்பவர்களின் மனதை சொக்க வைக்கும்.

இருபுறமும் அடர்ந்து படர்ந்து கிடக்கும் அலையாத்திகாடுகளின் இயற்கை அழகு அவர்களை மெய்மறக்க வைக்கும். உள்ளே சென்றதும் லகூன் பகுதியில் உள்ள குட்டிக்குட்டி தீவுகளின் அழகாக பிரமிக்க வைக்கும். ஆங்காங்கே தென்படும் பறவைகளின் கூச்சல் சத்தம் நம்மை ரசிக்க வைக்கும்.

இப்படி ஆற்றின் வழிப்பயணமாக கடலுக்குச் செல்வதும் ஒரு ஆனந்தம் தான். அந்த அளவிற்கு ஒட்டு மொத்த இயற்கையின் அழகை காட்டும் ஒரு சொர்க்க பூமியாக இங்கு காணமுடியும். அதனால் இந்த காட்டின் அழகை ரசிக்க ஆண்டு முழுவதும் தமிழகம் மற்றுமின்றி இந்தியாவில் பல்வேறு பகுதியிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வந்து செல்கின்றனர்.

தற்போது பொங்கல் விடுமுறை என்பதால் தமிழகத்தில் பல்வேறு பகுதிலிருந்து இங்கு வந்து செல்கின்றனர். ஒவ்வொரு வருடமும் பொங்கல் மூன்று நாள் விடுமுறை விடப்படுவது வழக்கம். ஆனால் இந்த வருடம் சுற்றுலா பயணிகளின் கோரிக்கையை ஏற்று இந்த வருடம் பொங்கல் மூன்று நாளும் அனுமதிக்கப்பட்டது. அதனால் பொங்கல் முதல் நாளில் அதிகளவில் கூட்டம் காணப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் மாட்டு பொங்கலை முன்னிட்டு அதிகளவில் கூட்டம் காணப்பட்டது.

இந்நிலையில் நேற்று காணும் பொங்கலை முன்னிட்டு தொலைதூரத்திலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கார் வேன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வாகனங்களில் அலையாத்திகாட்டிற்கு செல்ல வந்திருந்தனர். இதனால் படகுகள் சுற்றுலா பயணிகளை ஏற்றி உள்ளே அழைத்து செல்வதும் திரும்ப கொண்டு வருவதுமாக நேற்று களைக்கட்டி காணப்பட்டது.

இதில் அலையாத்திகாட்டிற்கு உள்ளே செல்ல முத்துப்பேட்டை கோவிலூர் கிழக்கு கடற்கரை சாலை அருகே உள்ள வனத்துறை அலுவலகத்தில் அனுமதி டிக்கெட் எடுக்க வேண்டும் என்பதால் கூட்டம் அலைமோதியது. தற்போது வனத்துறை சார்பில் மூன்று படகு மட்டுமே பயன்பாட்டில் உள்ளதால் யாருக்கு டிக்கெட் கொடுப்பது என திக்குத்தெரியாமல் வனத்துறையினர் பெரும் அவதிக்குள்ளாகினர்.

சிலர் டிக்கெட் கிடைக்காததால் ஆத்திரம் அடைந்து வனத்துறையினரிடம் தகராறு செய்து ரகளையில் ஈடுபட்டனர். ஏராளமான சுற்றுலா பயணிகளின் குடும்பத்தினர் பல மணி நேரம் காத்திருந்து அலையாத்திகாட்டிற்கு சென்று சுற்றி பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் ஊர் திரும்பினர்.

இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில்,நாங்கள் இந்த அறிய பகுதியை காண நெடுந்தொலைவிலிருந்து வருகிறோம் காலையிலிருந்து காதிருந்தும் எங்களுக்கு படகு கிடைக்கவில்லை அதனால் ஏமாற்றத்துடன் நாங்கள் திரும்புகிறோம் வரும் காலங்களில் வனத்துறை சார்பில் கூடுதல் படகுகள் வாங்கி விடவேண்டும்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கூறினால் எனக்கு தெரியாது என கைவிரித்து விடுகின்றனர் அதனால் இதற்க்கென தனியாக ஒரு அதிகாரியை நியமனம் செய்ய வேண்டும் குறிப்பாக எங்களை போன்ற வெளியூர் சுற்றுலா பயணிகள் பயன்படும் வகையில் ஆன்லைன் முன்பதிவு வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றனர்.

The post காணும் பொங்கலை முன்னிட்டு அலையாத்தி காட்டிற்கு சுற்றுலா வந்த பயணிகள் ஏமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Alayathi forest ,Muthupettai ,Pongal ,Alayathikkadu ,Muthuppet ,
× RELATED முத்துப்பேட்டையில் தொடக்கப்பள்ளி சார்பில் ஐம்பெரும் விழா