×

அந்தோணியார் ஆலய விழாவை முன்னிட்டு கச்சத்தீவில் அதிகாரிகள் ஆய்வு

ராமேஸ்வரம் :கச்சத்தீவில் ஆண்டுதோறும் நடைபெறும் புனித அந்தோணியார் ஆலய திருவிழா பிப்.23 மற்றும் 24ம் தேதிகளில் நடைபெறுகிறது. இத்திருவிழாவில் இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என இலங்கை அரசு எதிர்பார்க்கிறது. இதனால் திருவிழாவிற்கு வரக்கூடிய பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்வதற்கு யாழ்ப்பாணம் மாவட்ட நிர்வாகத்திற்கு இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் கச்சத்தீவு இலங்கை கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இலங்கை வடக்கு பிராந்திய கடற்படை அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.திருவிழாவில் இந்த ஆண்டு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் அதற்கு தகுந்தாற்போல் அங்குள்ள செடிகளை சீரமைப்பது, அரசு அதிகாரிகள் ஊழியர்கள் தங்கும் தற்காலிக கூடாரங்கள், குடிதண்ணீர், கழிப்பறை வசதி, மின்சார விளக்கு உட்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.

இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக யாழ்ப்பாணம் மாவட்ட மேலதிக அரசு அதிகாரி  மோகன் தலைமையில், நெடுந்தீவு பிரதேச அரசு செயலாளர் சத்யஜோதி, பாதிரியார் வசந்தன் அடிகளார் மற்றும் கடற்படை அதிகாரிகள் நேற்று கச்சத்தீவு சென்றனர். அங்கு செய்யப்பட வேண்டிய அனைத்து பணிகள் குறித்தும், பாதுகாப்பு, படகு நிறுத்தும் தற்காலிக தளம் குறித்தும் ஆய்வு செய்தனர்.

மேலும் அந்தோணியார் கோயிலில் செய்யப்பட வேண்டிய முன் ஆயத்த பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. ஒரு சில நாட்களில் யாழ்ப்பாணம் மாவட்ட அரசு செயலாளர் அலுவலகத்தில் கச்சத்தீவு தொடர்பாக நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் திருவிழா ஏற்பாடுகள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

The post அந்தோணியார் ஆலய விழாவை முன்னிட்டு கச்சத்தீவில் அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Kachchathivi ,Anthony temple festival ,Rameswaram ,St. Anthony's temple festival ,Kachatthivi ,Sri Lankan government ,Sri Lanka ,India ,
× RELATED மின் தடையை சீரமைக்க கோரிக்கை