×

திருமண வரமருளும் கல்யாண கந்தஸ்வாமி

சென்னை, மடிப்பாக்கம்

வள்ளி தெய்வானையுடன் திருமணத் திருக்கோலத்தில் முருகப் பெருமான் திருவருள்புரியும் திருத்தலம் சென்னை மடிப்பாக்கத்தில் உள்ளது. ஒவ்வொரு கார்த்திகை நட்சத்திர தினத்தன்றும் விசேஷ வழிபாடுகள், அலங்காரங்கள் இத்தலத்திலுள்ள முருகப்பெருமானுக்கு நடத்தப்படுகிறது. சுமார் நூறு வருடங்களுக்கு முன் இப்பகுதியைச் சேர்ந்த முருக பக்தர்கள் அடிக்கடி கந்தகோட்டம், திருப்போரூர் போன்ற தலங்களில் அருளும் கந்தஸ்வாமியை தரிசித்தனர்.

ஒருசமயம் அவர்கள் இப்பகுதியிலேயே முருகப் பெருமான் ஆலயத்தை எழுப்பி வழிபடத் தொடங்கினர். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் முருகனின் திருவருள் பொங்கிப் பெருக ஆலயம் புகழ் பெற்றது. ஆலய நுழைவு வாயிலில் கொடிமரமும், மயிலும் அமைந்துள்ளது. முருகனின் ஆறெழுத்து மந்திரமான சரவணபவ எனும் எழுத்துக்களே இங்கு கருவறைக்குச் செல்லும் படிக்கட்டுகளாக உள்ளதென்பது ஐதீகம். இந்த படிகளுக்கு படி பூஜையும் நடைபெறுகிறது.

பங்குனி உத்திரம் மற்றும் கந்தசஷ்டியன்று முருகப் பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெறுகிறது. அப்போது முருகப் பெருமான் அணிந்திருந்த மாலையை திருமணமாக வேண்டிய கன்னியரும், காளையரும் பிரசாதமாக வாங்கி அணிய அவர்களுக்கு திருமணம் விரைவில் நிச்சயமாகிறது. எனவே, இத்தல முருகன் கல்யாண கந்தஸ்வாமி என போற்றப்படுகிறார். திருமணத் திருக்கோலத்தில் வீற்றிருப்பதால் இத்தலத்தில் சூரசம்ஹார விழா நடைபெறுவதில்லை.

இவரிடம் நேர்ந்து கொண்டு பிரார்த்தனை நிறைவேறியவர்கள் பால்குடம் எடுத்தும், அபிஷேகம் செய்தும், விசேஷ நாட்களில் அலகு குத்தியும் தம் நன்றிக்கடனை தெரிவிக்கின்றனர். பரம்பொருள் புருஷ வடிவில், மாயா சம்பந்தத்தால் தேவிகளை ஏற்கும்போது மாயை இரண்டு அம்சங்களாக உதிக்கிறாள். இந்த இரு அம்சங்களே சிவனுக்கு பார்வதி, கங்கையாகவும், திருமாலுக்கு ஸ்ரீதேவி, பூதேவியாகவும், நான்முகனுக்கு சாவித்ரி, சரஸ்வதி எனவும், விநாயகனுக்கு சித்தி, புத்தியாகவும் அருள்வது போல் முருகப் பெருமானுக்கு தேவசேனா, வள்ளி எனத் துணை நிற்கின்றன என கந்தபுராணம் கூறுகிறது. அதன்படி கருவறையில் தன் நாயகியரான வள்ளி தேவசேனாவுடன் அழகே உருவாய், அருளே வடிவாய் முருகப் பெருமான் திருவருள்புரிகிறார். மிகுந்த வரப்ரசாதியாக அவர் பக்தர்களால் போற்றப்படுகிறார்.

முன்பொரு சமயம் நாரதர் கூறிய திருமுருகனின் லீலா விநோதங்களைக் கேட்டு அகமகிழ்ந்த நாரணன் மகிழ்ச்சிப் பெருக்கில் ஆனந்தக் கண்ணீர் பெருக்க அவர்தம் கண்ணீரிலிருந்து உதித்த இரு பெண்களும் முருகனைக் கணவராய் அடைய அரியிடம் வரம் கேட்டனர். அமுதவல்லி, சுந்தரவல்லி எனும் அந்த இருவரையும் பூவுலகில் தவம்புரியப் பணித்தார் பரந்தாமன். அவ்வாறே தவம் புரிந்த அவர்களின் முன் தோன்றிய முருகன், ‘அமுதவல்லி தேவேந்திரன் மகளாக இந்திரலோகத்தில் தேவசேனா எனும் பெயருடன் வளரவும், சுந்தரவல்லி பூமியில் வேடுவர் குலத்தில் வள்ளியாக வளர்ந்திடவும், தக்க காலத்தில் தாம் அவர்களை மணம் புரிவதாகவும்’ வாக்குறுதி அளித்தான். காலம் கனிந்தது.

சூரபத்மனை இரு கூறாக்கி சேவலாகவும், மயிலாகவும் மாற்றி அருளி தேவலோகத்தைக் காத்த கருணாமூர்த்தியான முருகப்பெருமானின் வீரதீர பராக்ரமத்தால் மனமகிழ்ந்த தேவேந்திரன் தன் மகளான தெய்வானையை முருகப் பெருமானுக்கு மணமுடித்துத் தந்தார். அதே போன்று தினைப்புனம் காத்த வள்ளியை வேடனாய், வேங்கை மரமாய் மாறி விநாயகரை மறந்ததால் இடர்ப்பட்டு விநாயகரை வேண்டி யானையின் உருவில் வரச்செய்தான் முருகப் பெருமான்.

யானையைக் கண்டு பயந்த வள்ளிநாயகி முருகனை கட்டி அணைக்க முருகப்பெருமானின் திருவருளை உணர்ந்து வள்ளிநாயகியை அவருக்கு மணமுடிக்க முடிவெடுத்தான் வேடுவர்குல ராஜனான நம்பிராஜன். அதன்படி முருகப் பெருமான் எப்போதும் காதலுடன் தன்னையே நோக்கும் புள்ளிமானாகிய வள்ளி மானையும் மணந்தான். தேவசேனை தேவலோகத்து மந்தாரமாலை, முத்துமாலை போன்றவற்றை அணிந்த மார்பினள். முருகனின் இடப்புறம் அமர்ந்து அருள்பவள். வள்ளி தாமரைமலர் ஏந்தி, அலங்கார ரூபிணியாக, மாணிக்க மகுடங்கள் துலங்க இடப்புறம் வீற்றிருப்பவள். ஆகமங்கள் இவர்களை கஜா, கஜவல்லி என்று போற்றுகின்றன.

மேலும், வேதங்கள் இவ்விருவரையும் வித்யா, மேதா என்றும் போற்றுகிறது. சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் எனும் பழமொழிகூட சஷ்டிவிரதம் இருந்தால் கருப்பையில் மழலைவரம் வரும் என்பதைக் குறிக்கும் என்பர். அவ்வாறான முருகனுக்கு உறுதுணையாய் இருக்கும் சஷ்டி தேவியான தேவசேனாவை முருகனுடன் சேர்த்து வழிபட நீண்ட ஆயுளும் ஆரோக்யமும் சத்புத்ர பாக்யமும் கிடைக்கும். நீலச்சிகண்டியில் ஆரோகணித்து குமரவேலுடன் கோலக்குறத்தியாய் பக்தர்களைக் காக்க வருபவள் வள்ளி.

ஞானமும், தவமும் அறியாத வேடுவர் குல நங்கையைத் தானே வலியச் சென்று மணம் செய்த முருகனின் பரந்த நோக்கைக் கண்டு அருணகிரியார் மெய்சிலிர்த்து பேசுகிறார். “முனினாமுதா’’ எனும் சுப்ரமணிய புஜங்கத்தில் ஆதிசங்கரர்கூட குண்டலினி, நவவிதபக்தி செய்து தன்னை வழிபடும் அடியவருக்கு அருள்புரியும் அநேக தெய்வங்கள் உண்டு. ஆனால், எதுவுமே அறியாத எளியோர்க்கும் விரும்புவதைத் தரும் தெய்வமான முருகனின் பேரருளை வியக்கிறேன் என்கிறார்.

காலத்தின் வடிவை ஸ்தூலமாய் உருவகப்படுத்தினால், 60 வருடங்களையும் அறுபது படிகளாகக் கொண்டு அதன் மேல் கோலோச்சும் ஸ்வாமிநாதனாகிய முருகப் பெருமான் 60 வருடங்களாகிய காலத்தின் ஸ்தூலரூபம். காலத்தை ஒரு வருடத்தின் உருவமாய்க் கொண்டால் முருகனின் இரு கால்கள் தட்சிணாயணம், உத்ராயணம் ஆகிறது. ஆறு ருதுக்களும் ஆறுமுகங்கள், பன்னிரண்டு கரங்களே பன்னிரண்டு பாதங்களாகும்.

அதே காலம் ஒரு நாளாய் உருவம் கொண்டால் இரவு, பகலாகிறது. அதுவே முருகனின் வடிவமாய் எடுத்துக்கொண்டால் இரவு வள்ளி, பகல் தேவசேனா. இந்த இரண்டு சக்திகளும் இணைந்த ஒருவரே முருகனின் ரூபம். முருகனை காலரூபமாகவும், காலத்தை தன் வசத்தில் வைத்திருப்பவனாகவும் பேசுகிறது கந்தபுராணம். இவ்வளவு வல்லமை பொருந்திய வள்ளி தேவசேனா சமேத கல்யாண கந்தஸ்வாமியாகிய முருகப் பெருமான் தன் பக்தர்களுக்காக எதைத்தான் செய்ய மாட்டான்.

அங்காரகன் எனும் செவ்வாய்க் கிரகத்திற்கு அதிபதி முருகப்பெருமான். இத்தலத்தில் அங்காரகனுக்கு “தில பத்ம தானம்’’ எனும் விசேஷ பூஜை நடத்தப்படுகிறது. திலம் என்றால் எள். பத்மம் என்றால் தாமரை. இத்தல அங்காரகனின் பாதங்களில் செவ்வாய்க் கிழமையன்று எள்ளையும் தாமரையையும் சமர்ப்பித்து மனமுருக பிரார்த்தனை செய்தால் அனைத்து தோஷங்களும் நீங்கும்.

கருவறையின் தெற்கில் கருணை கணபதி, வடக்கில் செவ்வாய் பகவான் இருவரும் துவாரபாலகர்களைப் போல வீற்றிருக்கின்றார்கள். கோஷ்டங்களில் குருபகவானும், ஜெயதுர்க்காவும் திருவருட்பாலிக்கின்றனர். இவர்கள் தவிர ராமர், சீதை, லட்சுமணர், அபீதகுசாம்பிகை சமேத அருணாசலேஸ்வரர், நவகிரகங்கள் போன்றோரும் தனிச் சந்நதியில் அருள்கின்றனர்.
கேட்ட வரங்களை கேட்டவாறே அருளும் கல்யாணகந்தசுவாமியை தரிசித்து வளங்கள் பெறுவோம்.

தொகுப்பு: அருள்ஜோதி

The post திருமண வரமருளும் கல்யாண கந்தஸ்வாமி appeared first on Dinakaran.

Tags : Kalyana Kandaswamy ,Madipakkam ,Karthika Nakshatra ,Lord ,Muruga ,
× RELATED பல கொலை வழக்குகளில் தலைமறைவு பிரபல ரவுடி அதிரடி கைது