×

பழநி மலைக்கோயிலில் தைப்பூச திருவிழா நாளை துவக்கம் : வரும் 25ம் தேதி தேரோட்டம்

பழநி : பழநி மலைக்கோயிலில் தைப்பூச திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். இத்திருவிழாவிற்கு காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து செல்வர்.

இத்திருவிழாவிற்கு கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்தே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வர துவங்கி விட்டனர். 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா நாளை காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் மகர லக்னத்தில் கிழக்கு ரத வீதியில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது.

திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வள்ளி – தெய்வானை சமேதரராய் முத்துக்குமாரசுவாமி தந்தப்பல்லக்கு, வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளிக்காமதேனு, வெள்ளி யானை, தங்கக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வரும் ஜன.24ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் சிம்ம லக்னத்தில் நடக்க உள்ளது.

இரவு 9 மணிக்கு வெள்ளி ரதத்தில் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி, ரத வீதிகளை உலா வரும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. முத்திரை நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் ஜன.25ம் தேதி நடக்க உள்ளது. அன்று மாலை 4.30 மணிக்கு ரதவீதியில் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஜன.28ம் தேதி இரவு 7 மணிக்கு தெப்பத்தேர் உற்சவம் நடைபெறும். இரவு 11 மணிக்கு கொடி இறக்குதலுடன் விழா முடிவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பழநி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

The post பழநி மலைக்கோயிலில் தைப்பூச திருவிழா நாளை துவக்கம் : வரும் 25ம் தேதி தேரோட்டம் appeared first on Dinakaran.

Tags : Thaipusa festival ,Palani Hill Temple ,Palani: ,Thaipusam ,Palani Thandayuthapani Swamy Hill Temple ,Dindigul District ,Karaikudi ,Sivagangai ,Ramanathapuram ,Dindigul ,Madurai ,Theni ,Virudhunagar ,Chariot ,
× RELATED வயல்வெளி பள்ளியின் நன்மை வேளாண் துறை அட்வைஸ்