×

பொங்கல் விடுமுறையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு 62 ஆயிரம் பார்வையாளர்கள் வருகை: காணும்பொங்கலுக்கு 24 ஆயிரம் பேர் குவிந்தனர்

தாம்பரம், ஜன. 18: பொங்கல் விடுமுறையையொட்டி அதிக அளவில் பொதுமக்கள் வருகை தருவார்கள் என்பதால் வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல்துறை மற்றும் பிற துறைகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தது. அதன்படி, பார்வையாளர்கள் அனைவரும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் பைகள் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களை பூங்காவிற்குள் கொண்டு வருவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. கடந்த 16ம் தேதி உள்பட பொங்கல் பண்டிகையின் அனைத்து நாட்களிலும் பூங்கா பார்வையாளர்களுக்காக திறந்திருந்தது. மேலும் பொதுமக்கள் வசதிக்காக டிக்கெட் முன்பதிவு செய்ய 10 நேரலை கவுண்டர்கள், ஆன்லைன் டிக்கெட் வசதி மற்றும் க்யூஆர் குறியீடு அடிப்படையிலான டிக்கெட் அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களின் பாதுகாப்பிற்காகவும், எளிதாக அடையாளம் காணும் வகையிலும் கைக் குறிச்சொற்கள் பெற்றோரின் தொடர்பு எண்ணுடன் அட்டை கட்டப்பட்டது. மேலும் பூங்காவில் 130 சீருடை வன ஊழியர்கள், 100 போலீஸ் பணியாளர்கள் மற்றும் 150 என்எஸ்எஸ் மற்றும் என்சிசி மாணவர்கள் பணியில் இருந்தனர். பாதுகாப்பு காரணங்களுக்காக நுழைவாயிலில் 3 மெட்டல் டிடெக்டர்கள் அமைக்கப்பட்டிருந்தது. பூங்கா முழுவதிலும் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அறிவிப்பு ஒலிபெருக்கிகள் அமைக்கப்பட்டிருந்தது. பூங்காவில் கூடுதலாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

அதோடு ஐந்து மருத்துவ உதவி மையங்கள், ஆம்புலன்ஸ் வசதிகள், நான்கு உதவி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் நுழைவாயிலுக்கு அருகில் ஒரு தீயணைப்பு வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. வாகன நிறுத்துமிடத்திலிருந்து பூங்காவிற்கு வர இலவச போக்குவரத்து வசதி சேவை செய்யப்பட்டிருந்தது. பூங்காவின் செயல்பாடுகளை விவரிக்கும் ஆவணப்படம் மற்றும் பூங்கா விலங்குகளின் திரைதொகுப்புகள் இரண்டு பெரிய எல்இடி திரையில் திரையிடப்பட்டது.

பார்வையாளர்கள் உயிரியல் பூங்காவில் புதிய வரவான இருவாச்சி பறவை, மலேயன் ராட்சத அணில், ஜம்முவிலிருந்து கொண்டு வரப்பட்ட ஹிமாலயன் கருப்பு கரடி, சிவப்பு மார்பகக் கிளி மற்றும் பல உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு விலங்குகள் உயிரினங்களை காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் பொதுமக்களின் வசதிக்காக மாலை நேரத்தில் பல்வேறு இடங்களில் கூடுதல் ஒளி விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 15, 16ம் தேதிகளில் பல்வேறு பகுதிகளில் இருந்து 38 ஆயிரம் பேர் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு வந்திருந்தனர். விடுமுறையின் கடைசி நாளான நேற்று (17ம் தேதி) 24 ஆயிரம் பேர் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு வந்திருந்தனர். இதன் மூலம் கடந்த மூன்று நாட்கள் பொங்கல் விடுமுறையில் மொத்தம் 62 ஆயிரம் பொதுமக்கள் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வந்ததாக உயிரில் பூங்கா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

The post பொங்கல் விடுமுறையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு 62 ஆயிரம் பார்வையாளர்கள் வருகை: காணும்பொங்கலுக்கு 24 ஆயிரம் பேர் குவிந்தனர் appeared first on Dinakaran.

Tags : Vandalur Zoo ,Pongal holiday ,Kanum Pongal ,Tambaram ,Vandalur zoo administration ,Pongal ,
× RELATED கோடை விடுமுறையை முன்னிட்டு இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா இயங்கும்