×

காணும் பொங்கலை முன்னிட்டு சுற்றுலா தலங்களில் அலைமோதிய கூட்டம்:  கடல், ஏரியில் குளித்து உற்சாகம்  பாதுகாப்புக்காக போலீசார் குவிப்பு

பொன்னேரி, ஜன.18: காணும் பொங்கலை முன்னிட்டு பழவேற்காடு, பூண்டி நீர்த்தேக்கம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதியது. கடல், ஏரிகளில் குளித்து பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் உற்சாகமாக காணும் பொங்கலை கொண்டாடினர். பாதுகாப்புக்காக பல்வேறு இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்துள்ள பழவேற்காட்டில் காணும் பொங்கலை முன்னிட்டு நேற்று ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். அவர்கள் ஆனந்தமாக கடலில் குளித்து, கடல் அழகை ரசித்தனர்.

ஆட்டோ, டிராக்டர், சரக்கு வாகனம், கார், பைக் என நேற்று பல்வேறு வாகனங்களில் பழவேற்காட்டிற்கு பொதுமக்கள் படையெடுத்து வந்தனர். பழவேற்காடு கடற்கரைக்கு திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது சென்னையில் இருந்தும் ஏராளமானோர் நேற்று குவிந்தனர். அங்கு தடுப்புகள் ஏதும் அமைக்கப்படாததால் சிறுவர்கள், பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என வயது வித்தியாசமின்றி அனைவரும் கடலில் ஆனந்த குளியலிட்டு உற்சாகத்தில் திளைத்தனர்.

கடலில் துள்ளி குதித்து விளையாடியும், செல்பி எடுத்தும், மணலில் வீடு கட்டியும் மகிழ்ந்தனர். வீட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட உணவை கடற்கரை மணலில் அமர்ந்து குடும்பத்துடன் கடலழகை ரசித்தபடி உண்டு மகிழ்ந்தனர். பழவேற்காட்டில் சுற்றுலா பயணிகள் வருகையை முன்னிட்டு 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆழமான பகுதிக்குச் செல்ல வேண்டாம் என காவல்துறையினர் அவ்வப்போது ஒலிபெருக்கியில் எச்சரித்தனர். பொதுமக்கள் கடலில் ஆனந்த குளியல் போட்டு வரும் நிலையில் அசம்பாவித சம்பவங்கள் நேர்ந்தால் உடனடியாக அவர்களை மீட்பதற்காக தீயணைப்பு வீரர்கள் கடற்கரையில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் 108 ஆம்புலன்ஸ் வாகனமும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. கடலில் குளிப்பது மட்டுமின்றி கடற்கரையில் பலூன் சுடுதல், ராட்டினம் சுற்றுதல் என விதவிதமாக விளையாடி சிறுவர்கள் குதூகலமடைந்தனர். மேலும் மீன் வறுவல், ஐஸ், சோளம் உள்ளிட்ட பல்வேறு வகையிலான தின்பண்டங்களை சுவைத்து மகிழ்ந்தனர். கடற்கரை அருகே அமைந்துள்ள கலங்கரை விளக்கத்தின் மேலே சென்று அங்கிருந்தபடி பருந்து பார்வையில் கடல் அழகை ரசித்தனர். காணும் பொங்கலை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளதால் பழவேற்காடு பரபரப்பாக காணப்பட்டது.

சுற்றுலா பயணிகளின் வருகை காரணமாக பழவேற்காட்டில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. காணும் பொங்கல் தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் பாதுகாப்பிற்காக பொன்னேரி டிஎஸ்பி கிரியா சக்தி தலைமையில், ஆய்வாளர்கள் வடிவேல் முருகன், மகேஷ், நித்யா, தமிழ்ச்செல்வி மற்றும் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என 150 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திலும் நேற்று காணும் பொங்கலை முன்னிட்டு மக்கள் கூட்டம் அலைமோதியது.

சமீபத்தில் பெய்த மழையால் இங்கு தண்ணீர் நிரம்பி கடல் போல் காட்சியளித்தது. மேலும் சென்னை மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரிக்கும் சோழவரம், செங்குன்றம், மாதவரம் மற்றும் புழல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நேற்று காலை முதல் மாலை வரை ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து காணும் பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர். இதேபோல் தாமரைப்பாக்கம் அணைக்கட்டு பகுதியிலும் மக்கள் குவிந்தனர். அங்குள்ள கொசஸ்தலை ஆற்றில் குளித்து காணு்ம் பொங்கலை கொண்டாடினர். கடல், ஏரியில் குளித்தும், செல்பி எடுத்தும், மணலில் வீடு கட்டியும் மகிழ்ந்தனர். வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவை குடும்பத்துடன் உண்டு மகிழ்ந்தனர்.

The post காணும் பொங்கலை முன்னிட்டு சுற்றுலா தலங்களில் அலைமோதிய கூட்டம்:  கடல், ஏரியில் குளித்து உற்சாகம்  பாதுகாப்புக்காக போலீசார் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : Pongal festival ,Ponneri ,Palavekadu ,Poondi Reservoir ,Pongal ,Thiruvallur district ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த...