×

கிரிவலம் சென்று அருள்பாலித்த அண்ணாமலையார் ஏராளமான பக்தர்கள் தரிசனம் திருவண்ணாமலையில் திருவூடல் திருவிழாவின் நிறைவாக

திருவண்ணாமலை, ஜன.18: திருவண்ணாமலையில் திருவூடல் திருவிழா நிறைவாக அண்ணாமலையார் கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதையொட்டி, 14 கி.மீ. தூரமுள்ள கிரிவலப்பாதையின் வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்து தரிசனம் செய்தனர். அக்னித்தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில், ஆண்டுதோறும் தை 2ம் நாளன்று நடைபெறும் திருவூடல் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இறைவனுக்கும் ஊடலும், கூடலும் இயற்கையே என்பதை உலகுக்கு உணர்த்தும் வகையில், அண்ணாமலையாருக்கும் உண்ணாமலையம்மனுக்கும் இடையே ஏற்படும் ஊடல் மற்றும் கூடல் திருவிளையாடலை நினைவுகூறும் விதமாக இவ்விழா நடக்கிறது. அதன்படி, நேற்று முன்தினம் காலை அண்ணாமலையார் கோயில் திட்டிவாசல் வழியாக எழுந்தருளிய அண்ணாமலையார் சூரியனுக்கும், நந்திக்கும் காட்சியளித்தார். அதன் தொடர்ச்சியாக, மாலை 6 மணியளவில் மாடவீதியான திருமஞ்சன கோபுரம் வீதியில் திருவூடல் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. அதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஊடல் காரணமாக, குமரக்கோயிலில் சுவாமி இரவில் தங்கும் நிகழ்வும் நடந்தது. இந்த விழாவின் தொடர்ச்சியாக, நேற்று அதிகாலை அண்ணாமலையார் கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அதையொட்டி, கிரிவலப்பாதை அமைந்துள்ள 14 கி.மீ. தூரமும் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்து சுவாமிக்கு மண்டகப்படி செலுத்தி சுவாமியை வழிபட்டனர். இறைவனே மலை வடிவாக காட்சி தரும் தீபமலையை பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வலம் வந்து வழிபடுவது வழக்கம். சிறப்பு மிக்க தீபமலையை அண்ணாமலையாரே கிரிவலம் செல்லும் நிகழ்வு ஆண்டுக்கு 2 முறை நடைபெறுவது குறிப்பிடத்தக்கதது. அதன்படி, கார்த்திகை தீபத்திருவிழா முடிந்த மறுதினமும், திருவூடல் திருவிழாவிலும் அண்ணாமலையார் கிரிவலம் வருவது தனிச்சிறப்பாகும். சுவாமி கிரிவலத்தின் நிறைவாக, அண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலையார் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து, நேற்று மாலை சுவாமிக்கும் அம்மனுக்கும் இடையே ஏற்பட்ட ஊடல் தீர்ந்ததன் அடையாளமாக மறுவூடல் நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது. அதைத்தொடர்ந்து, சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. விழாவை முன்னிட்டு, அண்ணாமலையார் கோயிலில் நேற்று ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய திரண்டனர். எனவே, நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

The post கிரிவலம் சென்று அருள்பாலித்த அண்ணாமலையார் ஏராளமான பக்தர்கள் தரிசனம் திருவண்ணாமலையில் திருவூடல் திருவிழாவின் நிறைவாக appeared first on Dinakaran.

Tags : Annamalaiyar ,Krivalam ,Tiruvudal festival ,Tiruvannamalai ,Thiruvannamalai ,Kriwalabathi ,Tiruvannamalai Annamalaiyar ,Thai ,Thiruvoodal festival ,
× RELATED அண்ணாமலையார் கோயிலில் போலீஸ்...