×

ரோகித் 121*, ரிங்கு சிங் 69*இந்தியா 4 விக்கெட்டுக்கு 212

பெங்களூரு: ஆப்கானிஸ்தான் அணியுடனான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில், கேப்டன் ரோகித் ஷர்மா – ரிங்கு சிங் ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன் குவித்தது. எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. ஜிதேஷ், அக்சர், அர்ஷ்தீப் ஆகியோருக்கு பதிலாக சாம்சன், குல்தீப், ஆவேஷ் கான் இடம் பெற்றனர். ஜெய்ஸ்வால், கேப்டன் ரோகித் இணைந்து இந்திய இன்னிங்சை தொடங்கினர். ஜெய்ஸ்வால் 4 ரன் எடுத்து வெளியேற, அடுத்து வந்த கோஹ்லி சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டானார். ஷிவம் துபே 1 ரன்னில் நடையை கட்ட, சஞ்சு சாம்சனும் முதல் பந்தில் முட்டை போட்டார்.

இந்தியா 4.3 ஓவரில் 22 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், ரோகித் – ரிங்கு சிங் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்கப் போராடினர். ரிங்கு பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, ரோகித் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தார். முதல் 2 போட்டியிலும் டக் அவுட்டாகி இருந்த அவர், அதற்கு வட்டியும் முதலுமாக பெங்களூருவில் ருத்ரதாண்டவம் ஆடினார். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் ஆப்கான் பவுலர்கள் விழி பிதுங்கினர்.
பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்ட ரோகித் 64 பந்தில் சதம் அடிக்க, மறுமுனையில் ரிங்கு 36 பந்தில் அரை சதம் விளாசினார். கரிம் ஜனத் வீசிய கடைசி ஓவரை ரிங்கு ஹாட்ரிக் சிக்சருடன் முடித்துவைக்க, இந்தியா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன் குவித்தது. ரோகித் 121 ரன் (69 பந்து, 11 பவுண்டரி, 8 சிக்சர்), ரிங்கு 69 ரன்னுடன் (39 பந்து, 2 பவுண்டரி, 6 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆப்கான் பந்துவீச்சில் பரீத் அகமது 3, அஸ்மதுல்லா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 213 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஆப்கான் களமிறங்கியது.

The post ரோகித் 121*, ரிங்கு சிங் 69*இந்தியா 4 விக்கெட்டுக்கு 212 appeared first on Dinakaran.

Tags : Rohit 121 ,Ringu Singh ,India ,Bengaluru ,T20I ,Afghanistan ,Rohit Sharma ,M. Chinnaswamy Stadium ,Rohit ,Dinakaran ,
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!