×

அரசு பள்ளிக்கு ரூ.7 கோடி நிலம் நன்கொடை மதுரை ஆயி பூரணத்தை சந்தித்து அமைச்சர் உதயநிதி வாழ்த்து

மதுரை: அரசு பள்ளிக்கு ரூ.7 கோடி மதிப்புள்ள இடத்தை நன்கொடையாக வழங்கிய ஆயி பூரணத்தை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மறைந்த தனது மகள் ஜனனி நினைவாக அரசுப் பள்ளிக்கு ரூ.7 கோடி மதிப்புள்ள 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை மதுரை வங்கி ஊழியர் ஆயி பூரணம் தானமாக வழங்கியுள்ளார். இந்தநிலையில் மதுரை சூர்யா நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சென்று அவருக்கு பொன்னாடை அணிவித்து, திருவள்ளுவர் சிலை, பரிசுகள் வழங்கி உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கல்வியையும், கற்பித்தலையும் உயர்ந்த அறமாக மதிக்கும் தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக விளங்கும் ஆயி பூரணத்தின் கொடையுள்ளத்தைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையில் வரும் குடியரசு நாள் விழாவில் அரசின் சார்பில் அவருக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இவரின் தன்னலமற்ற செயல் மிகப்பெரிய முன்னுதாரணமாக விளங்குகிறது. அவரது கொடைக்கு தலைவணங்கி நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.

ஆயி பூரணம் கூறுகையில், ‘‘அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்னை பாராட்டியதை பெரிய விஷயமாகக் கருதுகிறேன். அவரிடம், பள்ளியில் கட்டிடம் கட்டியதும் வளாகத்தில் என் மகளின் பெயரை வைக்க கோரினேன். முதலமைச்சரிடம் பேசி ஆவண செய்வதாக தெரிவித்துள்ளார். எல்லாப்புகழும் என் மகள் ஜனனியையே சேரும். இப்படி பெரிய பெரிய உயரதிகாரிகள் எல்லாம் இந்த சின்ன ஆன்மாவிற்காக காத்திருந்து சந்தித்து வாழ்த்துவது மகிழ்ச்சி தருகிறது. இவ்வளவு பிசியான நேரத்தில், கடும் பணிக்கிடையே அவர் என்னை வந்து பார்த்து சென்றதை ரொம்ப ரொம்ப பெருமையாகக் கருதுகிறேன்’’ என்றார்.

The post அரசு பள்ளிக்கு ரூ.7 கோடி நிலம் நன்கொடை மதுரை ஆயி பூரணத்தை சந்தித்து அமைச்சர் உதயநிதி வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi ,Madurai Aai Purana ,Madurai ,Udayanidhi Stalin ,Aai Purana ,Janani ,Dinakaran ,
× RELATED கோடைக் காலங்களில் ஏற்படும் உடல்...