×

மும்பையில் இருந்து பெங்களூருவுக்கு சென்ற போது விமானத்தின் கழிவறையில் சிக்கி 100 நிமிடங்கள் பரிதவித்த பயணி: தரை இறங்கிய பிறகே கதவை உடைத்து மீட்டனர்

புதுடெல்லி: மும்பையில் இருந்து பெங்களூரு சென்ற விமானத்தின் கழிவறையில் 100 நிமிடங்கள் சிக்கி கொண்ட இளைஞரை விமானம் தரை இறங்கிய பிறகே கதவை உடைத்து மீட்டனர். மும்பையில் இருந்து பெங்களூருவுக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் நேற்றுமுன்தினம் நள்ளிரவு புறப்பட்டு சென்றது. நடு வானில் சென்ற போது ஒரு இளைஞர் கழிவறைக்கு சென்றுள்ளார். கழிவறையின் கதவை திறக்க முடியாததாதல் அவர் உள்ளேயே சிக்கி கொண்டார். விமான பணிப்பெண்கள் மற்றும் ஊழியர்கள் எவ்வளவோ முயற்சித்தும் கதவை திறக்க முடியவில்லை. உள்ளே பதற்றத்தின் உச்சத்தில் அந்த பயணி இருந்தார். அவரை சமாதானப்படுத்துவதற்காக காகிதம் ஒன்றில், எவ்வளவு முயன்றும் கழிவறையின் கதவை எங்களால் திறக்க முடியவில்லை. இன்னும் சிறிது நேரத்தில் விமானம் பெங்களூருவில் தரையிறங்கிவிடும். அதுவரை கழிவறையில் பத்திரமாக உட்கார்ந்து இருங்கள். தரை இறங்கியதும் பொறியாளர்கள் வந்து உங்களை மீட்பார்கள் என்று எழுதி அதை கழிவறைக்குள் விமானப் பணிப்பெண் ஒருவர் தள்ளிவிட்டார். பெங்களூரு விமான நிலையம் வந்தடைந்ததும், கெம்ப கவுடா விமான நிலையத்தின் பொறியாளர்கள் கழிவறையின் கதவை உடைத்து திறந்து, 100 நிமிடங்களுக்கு மேல் உள்ளே சிக்கி பரிதவித்துக் கொண்டிருந்த பயணியை மீட்டனர். முதலுதவி சிகிச்சைக்கு பிறகு அந்த பயணி வீட்டுக்கு சென்றார். அந்த பயணியின் பெயர் விவரம் வெளியிடப்படவில்லை.

* கட்டணம் வாபஸ்

இந்த சம்பவத்தில் அந்த பயணிக்கு ஏற்பட்ட அவதிக்கு விமான நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. மேலும் , குறிப்பிட்ட பயணிக்கு விமான கட்டணம் முழுவதும் திருப்பி அளிக்கப்படும் என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

The post மும்பையில் இருந்து பெங்களூருவுக்கு சென்ற போது விமானத்தின் கழிவறையில் சிக்கி 100 நிமிடங்கள் பரிதவித்த பயணி: தரை இறங்கிய பிறகே கதவை உடைத்து மீட்டனர் appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Bengaluru ,New Delhi ,
× RELATED பிரமோத் மகாஜன் மகள் பூனம் மகாஜனுக்கு சீட் மறுத்தது பா.ஜ