×

810 காளைகள் சீறிப் பாய்ந்தன; 700 வீரர்கள் போராடி அடக்கினர் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அமர்க்களம்: 7 போலீசார் உட்பட 75 பேர் காயம்

அலங்காநல்லூர்: உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று அமர்க்களமாக நடந்தது. இந்த போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், 810 காளைகள் பங்கேற்றன. 700 வீரர்கள் களமிறங்கி விளையாடினர். போட்டியில் 7 போலீசார் உள்ளிட்ட 75 பேர் காயமடைந்தனர். போட்டியில் 18 காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு கடந்த 15ம் தேதி மதுரை அவனியாபுரம், நேற்று முன்தினம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடந்தது.

மூன்றாம் நாளான நேற்று மதுரை அருகே அலங்காநல்லூரில் உள்ள கோட்டை முனியசாமி வாடிவாசலில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு நடந்தது. முன்னதாக விநாயகர், முனியாண்டி, அய்யனார், கருப்புசாமி, காளியம்மன், முத்தாலம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் பாரம்பரிய முறைப்படி, காளைகளுக்கு வேட்டி, துண்டு, பரிசு பொருட்களை தலைச்சுமையாக வாண வேடிக்கையுடன் மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர், ஆன்லைனில் பதிவு செய்திருந்த காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

காலை 7 மணியளவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் பி.மூர்த்தி, அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் மதுரை கலெக்டர் சங்கீதா ஆகியோர் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தனர். இதையடுத்து ஆண்டுதோறும் நடக்கும் சம்பிரதாய முறைப்படி முதல் முனியாண்டி சுவாமி கோயில் காளை உள்ளிட்ட 3 கோயில் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. இந்த காளைகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் தங்கக்காசு வழங்கப்பட்டது. இதையடுத்து வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன.

ஒரு சுற்றுக்கு 100 காளைகள் மற்றும் 50 வீரர்கள் களமிறக்கப்பட்டனர். மாலை 5 மணி வரை 10 சுற்றுகளாக போட்டி நடைபெற்றது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் தீரத்துடன் அடக்கினர். 5 மணிக்கு ஜல்லிக்கட்டு நிறைவடையும் என்ற நிலையில் மேலும் ஒன்னே கால் மணிநேரம் அதிகரித்து 6.15 மணிக்கு ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது. இந்த போட்டியில் 7 போலீசார் உள்ளிட்ட 75 பேர் காயமடைந்தனர். மொத்த 810 காளைகள் அவிழ்த்து விடப்பட்டு, 700 வீரர்கள் இவற்றை அடக்கினர். வெற்றி பெற்ற வீரர்களுக்கும், காளைகளுக்கும் டூவீலர், டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்சி, கிரைண்டர், கட்டில், மெத்தை, சைக்கிள், தங்கம், வெள்ளிக் காசுகள், பித்தளை, சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்கள் பரிசுகள் அதிகளவு வழங்கப்பட்டன.

திருச்சி ஸ்ரீரங்கம் குணாவின் கட்டப்பா காளை முதல் பரிசு பெற்றது. குணாவு க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசு வழங்கப்பட்டது. மதுரை காமராஜர்புரத்தை சேர்ந்த சவுந்தர் என்பவரது வெள்ளக்காளை 2வது பரிசு பெற்றது. சவுந்தருக்கு டூவீலர் பரிசாக வழங்கப்பட்டது. 18 காளைகளை அடக்கிய மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த கார்த்திக் முதலிடம் பெற்றார். இவர் கடந்த 2021ல் பாலமேட்டிலும், 2022ல் அவனியாபுரத்திலும் நடந்த போட்டியில் முதல் பரிசு பெற்றவராவார். இவருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் பரிசு வழங்கப்பட்டது. 17 காளைகளை அடக்கிய சிவகங்கை மாவட்டம், பூவந்தியை சேர்ந்த அபிசித்தருக்கு 2ம் இடம் அறிவிக்கப்பட்டது. இவர் கடந்தாண்டு நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு பெற்றார். பரிசுகளை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார்.

இந்த போட்டியை அமைச்சர் ராஜ கண்ணப்பன், எம்எல்ஏக்கள் கோ.தளபதி (மதுரை வடக்கு), ஆ.வெங்கடேசன் (சோழவந்தான்), மு.பூமிநாதன் (மதுரை தெற்கு), தமிழரசி (மானாமதுரை), இலங்கை கிழக்கு மாகாண கவர்னர் செந்தில் தொண்டைமான், கால்நடை பராமரிப்புத் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் மங்கத் ராம் சர்மா, மதுரை கலெக்டர் சங்கீதா, நடிகர்கள் அருண் விஜய், சூரி உள்ளிட்ட ஏராளமானோர் கண்களித்தனர்.
இதையொட்டி ஜல்லிக்கட்டை மதுரை எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்கரே தலைமையில் 2 எஸ்பிக்கள், 12 ஏடிஎஸ்பிக்கள், 18 டிஸ்பிக்கள், 32 இன்ஸ்பெக்டர் உட்பட 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஊர்க்காவல் படை, தீயணைப்புத் துறை வீரர்கள் ஆங்காங்கே தனி அரங்கம் அமைத்து, பாதுகாப்பு மற்றும் ஒழுங்குபடுத்துதல் பணிகளில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த வன்னியன்விடுதி சித்தி விநாயகர் மாயன் பெருமாள் கோயில் பொங்கல் திருவிழாவையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. இதனை அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார். முதலாவதாக வாடிவாசலில் இருந்து கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதில் 594 காளைகள் களமிறக்கப்பட்டன. 234 வீரர்கள் பங்கேற்றனர். இதைதொடர்ந்து மற்ற ஊர் காளைகள் அவிழ்க்கப்பட்டது. மாடுகள் முட்டியதில் 22 வீரர்கள் காயமடைந்தனர். காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், வெள்ளி நாணயம், மின் விசிறி, சைக்கிள் மற்றும் ரொக்க பரிசுகளும் வழங்கப்பட்டன. 25 காளைகளை அடக்கிய திருச்சி மாவட்டம் சூரியூரை சேர்ந்த சிவாவுக்கு கோப்பையுடன் பைக்கை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.

திருச்சி: மணப்பாறை அடுத்த பாலக்குறிச்சி ஆவாரங்காடு பொன்னர் சங்கர் திடலில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதில் 626 காளைகள், 219 காளையர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியில் மாடுகள் முட்டியதில் 3வயது குழந்தை, 30 வீரர்கள், மாடு உரிமையாளர்கள் உட்பட 57 பேர் காயமடைந்தனர். காளைகளை அடக்கிய வீரர்கள், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு சைக்கிள், பீரோ, கட்டில், எவர்சில்வர் பாத்திரம், வெள்ளி காசு, ரொக்கப்பணம் பரிசுகள் வழங்கப்பட்டன.

* ‘முதல்பரிசு எனக்குத்தான் தரணும்’ பரிசு வாங்க மறுத்த 2ம் இடம் பிடித்த வீரர்
சிவகங்கை மாவட்டம் பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் 17 காளைகள் பிடித்து 2ம் இடம் பிடித்தார். தான் அதிக காளைகளை பிடித்ததாக கூறி இரண்டாம் பரிசு டூவீலரை வாங்க மறுத்து விட்டார். அவர் கூறுகையில், ‘‘கடந்த ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடம் பிடித்தேன். இந்த ஆண்டும் நான் சிறப்பாகத்தான் விளையாடினேன். எனக்கு கார் தேவையில்லை. என்னை முதல் பரிசு பெற்றவர் என அறிவித்தால் போதும். கார்த்திக்கை விட அதிக காளைகளை பிடித்துள்ளேன். இந்த பரிசு தொடர்பாக நீதிமன்றம் செல்ல இருக்கிறேன். அதற்கான வீடியோ ஆதாரங்களை பெற இருக்கிறேன்’’ என்றார். இதுகுறித்து அமைச்சர் பி.மூர்த்தியிடம் கேட்டபோது, ‘‘விழாக்கமிட்டியினர், அரசு அதிகாரிகள் குழுவினர் சேர்ந்துதான் இந்த 2ம் பரிசை அறிவித்துள்ளனர். எங்களுக்கு எல்லா வீரர்களும் சமம்தான். போட்டியின் ஆரம்பம் முதல் இறுதி வரை வீரர்கள், காளைகள் நடவடிக்கையை ஊடகங்கள், கண்காணிப்பு கேமராக்கள் வழியாக மக்களும், நாங்களும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இதில் எந்தவித தவறும் நடக்கவில்லை’’ என்றார்.

* பங்கேற்காதவர்களுக்கு ஜல்லிக்கட்டு அரங்கில் வாய்ப்பு: அமைச்சர் மூர்த்தி தகவல்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்ததும் அமைச்சர் பி.மூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது: அத்தனை அதிகாரிகளும் முழு ஒத்துழைப்பு தந்து இந்த ஜல்லிக்கட்டை சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறார்கள். அலங்காநல்லூர் கீழக்கரையில் ஜல்லிக்கட்டுக்காக பிரமாண்டம் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நடைபெற இருக்கும் போட்டிக்கு ஆன்லைன் பதிவு இருந்தாலும் முதலமைச்சரிடம், கால்நடைத்துறை அமைச்சரிடம் கலந்து பேசி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கலந்து கொள்ள இதுவரை வாய்ப்பு இல்லாதவர்களுக்கும் தொடர்ந்து நான்கு நாள் நடைபெறும் போட்டியில் அனுமதி வழங்கப்படும். இந்த ஜல்லிக்கட்டிலும் சிறந்த காளை, வீரர்களுக்கு பரிசு வழங்கப்படும். விடுபட்ட காளைகளுக்கும் அந்த மைதானத்தில் அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post 810 காளைகள் சீறிப் பாய்ந்தன; 700 வீரர்கள் போராடி அடக்கினர் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அமர்க்களம்: 7 போலீசார் உட்பட 75 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Alanganallur Jallikatu ,Amargalam ,Alanganallur ,World Cup ,Jallikatu ,Minister Assistant Secretary ,Stalin ,Dinakaran ,
× RELATED கல்லுமலை கோயில் சித்திரை திருவிழா