×

திண்டிவனத்தில் இருந்து கொண்டு வரப்படுகிறது; குமரியில் சூடுபிடிக்கும் தர்பூசணி பழங்கள் விற்பனை

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் தற்போது தர்பூசணி பழங்களின் விற்பனை சூடுபிடித்து இருக்கிறது. இந்த பழங்கள் திண்டிவனத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு கிலோ ரூ.20க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கோடைகாலத்தில் தாக்கும் கடும் வெயிலில் இருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள பழங்களை மக்கள் அதிக அளவு வாங்குகின்றனர். இதற்காக தர்பூசணி பழங்கள் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து குமரிக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. அதிக பழம் வரும்போது கிலோ ரூ.7 வரை விற்பனை செய்யப்படுகிறது. விலை குறையும்போது மக்கள் அதிக அளவு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். குமரி மாவட்டத்துக்கு தூத்துக்குடி, திருச்சி, திண்டிவனம் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து தர்பூசணி பழங்கள் வருவது வழக்கம்.

வடகிழக்கு பருவமழை முடிந்துள்ளதாக வானிலை மையம் அறித்து உள்ளது. இனி பனியின் தாக்கம் இருக்கும், தொடர்ந்து பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோடை வெப்பம் சுட்டெரிக்கும். இந்த வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மருத்துவர்கள் பல ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். குறிப்பாக தண்ணீர் அதிகம் குடிக்கவேண்டும். பழவகைகள், ஜூஸ் ஆகியவற்றை அதிக அளவு பயன்படுத்த வேண்டும் என்று கூறுவார்கள். தற்போது குமரி மாவட்டத்திற்கு திண்டிவனத்தில் இருந்து தர்பூசணி பழங்கள் விற்பனைக்காக கொண்டு வந்து அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளது. ஆகவே முக்கிய சாலையோரங்களில் தர்பூசணி பழங்கள் விற்பனைக்காக குவித்து வைத்து இருப்பதை பார்க்க முடிகிறது.

சீசன் தொடங்குவதற்கு முன்பு தர்பூசணி பழங்கள் வந்து உள்ளதால், கிலோ ரூ.20க்கு விற்பனை ெசய்யப்பட்டு வருகிறது. இதனை மக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்கின்றனர். இதற்கிடையே பொங்கல் பண்டிகையையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தொடர்விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ஒன்று சேர்ந்து பல்வேறு விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர். இது தவிர குளம், ஆறுகளில் மாணவ, மாணவிகள் ஒருங்கிணைந்து ஆனந்த குளியல் போட்டு கும்மாளமிடுவதைபும் அதிக அளவில் பார்க்க முடிகிறது. தற்பூசணி பழங்கள் வருகையையொட்டி வியாபாரி ஒருவர் கூறியதாவது: கடந்த காலங்களை விட தற்போது தர்பூசணி பழங்கள் விற்பனை அதிகரித்து உள்ளது.

பொதுமக்களும் ஆர்வமுடன் வந்து வாங்கிச்செல்கின்றனர். கோடைகாலத்தில் மட்டும் கடந்த காலங்களில் தற்பூசணி பழம் விற்பனை ஆகி வந்த நிலை தற்போது மாறியுள்ளது. தற்பூசணி பழம் சீசன் தொடங்கும் நிலையில் திண்டிவனத்தில் இருந்து தர்பூசணி பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. ஒரு கிலோ ரூ.20க்கு விற்பனை செய்து வருகிறோம் என்றார்.

The post திண்டிவனத்தில் இருந்து கொண்டு வரப்படுகிறது; குமரியில் சூடுபிடிக்கும் தர்பூசணி பழங்கள் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Dindivana ,Kumari ,Nagercoil ,Dindivan ,Dinakaran ,
× RELATED குமரி மாவட்டத்தில் 136 ரேஷன் கடைகளில்...