×

கல்வான் மோதல்களுக்கு பின்னர் இந்திய – சீன எல்லையில் 2 மோதல்கள் நடந்ததா?.. ராணுவம் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு

புதுடெல்லி: கல்வான் மோதல்களுக்கு பிறகு இந்திய – சீன படைகளுக்கு இடையே உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் இரண்டு மோதல்கள் நடந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்திய ராணுவத்தின் மேற்கு ராணுவ பிரிவின் கீழ் பணியாற்றும் வீரர்களுக்காகன வீரதீர விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கடந்தாண்டு மே 13ம் தேதி நடந்த இந்த நிகழ்வின் வீடியோவை சந்திமந்திரில் உள்ள ராணுவத்தின் மேற்கு ராணுவ தலைமையகம், தனது யூடியூப் சேனல் பக்கத்தில் பதிவேற்றியது. பின்னர் அந்த யூடியூப் சேனல் பக்கம் திடீரென முடக்கப்பட்டது.

இதுகுறித்து ராணுவம் தரப்பில் எவ்வித தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும் இந்த வீடியோவில் வரும் காட்சிகள் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2022ம் ஆண்டு நவம்பர் வரை சீனாவுடன் நடந்த மோதல்களாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் இரண்டு முறை மோதல்கள் நடந்ததா? அதற்கு மேலும் மோதல்கள் நடந்ததா? என்பது குறித்தும் ராணுவம் தரப்பில் எவ்வித பதிலும் அளிக்கவில்லை. முன்னதாக கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் கிழக்கு லடாக் எல்லையில் அமைந்துள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்திய- சீன ராணுவத்தினரிடையே பல்வேறு மோதல்கள் நடந்துள்ளன.

அதற்கு அடுத்த மாதம், கல்வான் பள்ளத்தாக்கில் அதேபோல் மோதல்கள் வெடித்தன. இரு தரப்பிலும் உயிரிழப்புகள் நடந்தன. இந்த சம்பவத்திற்கு பிறகு சுமார் 3,488 கி.மீ. தொலைவிலான எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இந்திய ராணுவம் சிறப்பு உஷார் நிலையில் உள்ளது. தவாங் செக்டாரிலும் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அப்போது, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், சீனாவின் அனைத்து முயற்சிகளையும் இந்திய வீரர்கள் உறுதியாக எதிர்கொண்டதாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறினார். இந்த நிலையில் லடாக், கல்வான் தாக்குதலுக்கு பின்னர் இந்திய – சீன ராணுவ வீரர்களின் மோதல்கள் நடந்துள்ள தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

The post கல்வான் மோதல்களுக்கு பின்னர் இந்திய – சீன எல்லையில் 2 மோதல்கள் நடந்ததா?.. ராணுவம் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : India-China ,Galwan clashes ,New Delhi ,Galwan ,Veeratheer awards ,Western Army Division of the Indian Army ,India-China border ,Kalwan ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு