×

பேரணாம்பட்டு அருகே தனியார் நிலத்தில் கொட்டப்படும் தோல் கழிவு: பொதுமக்கள் அவதி


பேரணாம்பட்டு: பேரணாம்பட்டு அருகே தனியார் நிலத்தில் தோல் கழிவுகள் கொட்டப்படுவதால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு-வி.கோட்டா சாலையில் எருக்கம்பட்டு கூட்ரோடு உள்ளது. இவ்வழியாக பத்தலபல்லி, எருக்கம்பட்டு, கோட்டையூர் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு மக்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் எருக்கம்பட்டு கூட்ரோடு பகுதில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான இடத்தில் கடந்த சில மாதங்களாக தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுபொருட்களை டிராக்டரில் ஏற்றி வந்து கொட்டி வருகின்றனர்.

இதற்காக ஆங்காங்கே குழிகள் தோண்டி அதில் நிரப்பி வருகின்றனர். இருப்பினும் குழிகள் சரியாக மூடப்படாத நிலையில் தற்போது அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அவ்வழியாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் உட்பட பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். மேலும் பலர் இந்த துர்நாற்றம் காரணமாக சுவாச கோளாறு ஏற்பட்டு சிரமமடைந்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், நிலத்தில் பள்ளங்கள் தோண்டி அதில் தோல் தொழிற்சாலை கழிவுகளை கொட்டி வருகின்றனர்.

இதனால் அருகில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கிறது. குறிப்பாக இப்பகுதி முழுவதும் நிலத்தடி நீர் மாசடைந்து வருகிறது. எனவே இவ்வாறு கழிவுகளை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இவற்றை அகற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

The post பேரணாம்பட்டு அருகே தனியார் நிலத்தில் கொட்டப்படும் தோல் கழிவு: பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Peranampatu ,Erukampattu Kootrod ,Peranampatu-V.Kota road ,Vellore district ,Pathalapally ,Erukampatu ,Kotdiyur ,
× RELATED வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட...