×

துலாம் ராசி: வண்ணங்களும் எண்ணங்களும்

வண்ணத்தை வசம் செய்யும் கலையே ஒரு நுட்பமானது. அதனை அறிவதற்கு அதனுடன் நாம்பயணப்பட்டால்தான் நாம் உணர முடியும். வண்ணங்கள், கிரகங்களின் ஆதிக்கத்தில்தான் இயங்குகின்றன. நமக்கு பிடித்தமான வண்ணங்களால், நாம் அந்த வண்ணத்திற்கு விருப்பம் கொண்டு, அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட கிரகத்தின் ஆதிக்கத்திற்கு உட்படுகிறோம் என்பதை அறியாமல் விரும்புகிறோம். ஆனாலும், விருப்பம் என்ற மனத்தின் தாக்கத்தினால் வண்ணம் நம்மை ஈர்த்துக் கொள்கிறது. இதனை நமது நேர்மறையாக மாற்றும் சிந்தனையே எண்ணங்களும் வண்ணங்களும்.

துலாம் ராசி: ராசிகளில் துலாம் ராசியின் சின்னம் சிறப்பானது. ஆம், இங்கு சனி பகவான் உச்சம் பெறுகிறார். பொதுவாக, இந்த ராசிக்காரர்கள் அல்லது லக்னக் காரர்கள் நீதி, நேர்மை, உண்மை ஆகியவற்றை நேசிக்கும் சுபாவம் உடையவர்களாக உள்ளார்கள். உங்களின் ராசிக்கு நான்காம் (4ம்) ஐந்தாம் (5ம்) அதிபதியாக வருவதால், உங்கள் செயலிலும் சிந்தனையிலும் நேர்மை உண்டெனில் மேன்மை உண்டு என்பதை நீங்கள் உணர்வீர்கள். நீங்கள் நீலத்தை பயன்படுத்தும் போது இந்த சிந்தனை இன்னும் மேலோங்கும். இதனால், உங்களுக்கு தானம், தர்மம் செய்ய வேண்டும் என்ற நற்சிந்தனைகள் உண்டாகும். ஆனால், அதிகமாக நீலத்தை பயன்படுத்தினால் கொஞ்சம் சோர்வுகள் உண்டாகும் வாய்ப்பு அதிகம்.

பொதுவாக, கறுப்பு வண்ணத்தை எதற்கும் பயன்படுத்த தயங்குவார்கள். நீங்கள் கரு நீலத்தை பயன்படுத்தலாம். நீங்கள் பிங்க் நிற வண்ணத்தை கோட்சாரத்தில் சுக்ரன் போகும் காலத்தில் பயன்படுத்த வேண்டாம். அதேசமயம், விருச்சிகத்தில் அமர்ந்த சுக்ரன், சப்தம பார்வையாக பார்க்க ரிஷபத்தை பார்வை செய்யும் போது, நீங்கள் பிங்க் நிற வண்ணத்தை பயன்படுத்தினால், தனவரவுகள் உண்டாக்கும். நீண்டநாள் வராத தடைபட்ட பணங்கள் வந்து சேரும் சூழ்நிலையை உருவாக்கும்.

உங்கள் ராசிக்கு பத்தாம் அதிபதியாக சிம்மம் வருவதால், வெற்றியின் அதிபதிக்கு உரிய சூரியன் உங்கள் ராசிக்குள் நுழைந்தால், நீசம் ஆகிவிடுவார். ஆனாலும், பதினொன்றாம் அதிபதி என்பதால் நன்மையே தருவார். எனவே, பெரியோர்களை, பெரிய அதிகாரிகளை, அரசாங்க தொடர்பானவர்களை சந்திக்கும் சமயத்தில் ஆரஞ்சு வண்ணம் நன்மைகள் செய்யும்.

உங்கள் ராசிக்கு மூன்றாம், ஆறாம் ராசியாக தனுசுவும் மீனமும் வருகிறது. இதன் அதிபதியாக குரு பகவான் இருக்கிறார். வியாழனுக்கு உரிய நிறமான மஞ்சள் நிறத்தை அதிகம் பயன்படுத்த வேண்டாம். உங்கள் பிறப்பு ஜாதகத்தில் வியாழன் கடகத்தில் இருந்தால், பயன்படுத்தக்கூடிய சூழ்நிலை உருவாகும். ஆனால், தவிர்த்தல் உங்களுக்கு நலம் தரும்.

பணம் போன்ற விஷயங்களை கையாளும் போது கவனம் அதிகம் தேவை. உங்கள் ராசிக்கு இரண்டாம் (2ம்), ஏழாம் (7ம்) அதிபதியாக செவ்வாய் வருவதால், செவ்வாய் கிரகத்திற்குரிய சிவப்பு வண்ணம் பொருளாதார ரீதியில் மேம்படுத்தும். பொதுவான விசேஷ வைபவங்களுக்கு செல்லும் காலத்தில் சிவப்பு பயன்படுத்துதல் சமூகத்தில் உங்கள் மதிப்பினை உயர்த்தும். அப்பொழுது உங்களின் செயல்பாடுகளும் செயலில் கூடுதல் வேகமும் உண்டாகும்.

நீங்கள் சோர்வான சமயங்களில், சிவப்பு வண்ணத்தை பயன்படுத்தினால், சோர்வுகள் இல்லாமல் போகும். துலாம் ராசிக்கு ஒன்பதாம் (9ம்), பனிரெண்டாம் (12ம்) அதிபதியாக புதன் கிரகம் வருவதால் உங்கள் வீட்டில் உறங்கும் மற்றும் பூஜை அறையில் பச்சை நிற வண்ணத்தை பயன்படுத்துதல், இன்னும் சிறப்பான பலன்களை உண்டாக்கும். உங்களின் பக்தி மேம்படும். அதே போல, உங்களுக்கு ஆழ்ந்த உறக்கத்தை தரும் என்பதால், பச்சை நல்வழிகாட்டும்.

வண்ணங்களோடு பயணித்து நேர்மறை ஆற்றல்களை சிந்தித்து எதிர்மறை ஆற்றல்களை விலக்கிக் கொள்ளுதல் வாழ்கையை மேம்படுத்தும் என்பது உறுதி. ஒளியற்ற உலகில் இயற்கை எதையும் படைப்பதில்லை. ஒளி மட்டுமே எல்லாவற்றையும் இந்த பிரபஞ்சத்தில் படைக்கிறது. ஒளியின் உன்னத நுட்பமே வண்ணமாகும். வண்ணங்களை வசமாக்குவோம்.

தொகுப்பு: சிவகணேசன்

The post துலாம் ராசி: வண்ணங்களும் எண்ணங்களும் appeared first on Dinakaran.

Tags :
× RELATED தெளிவு பெறுவோம்