×

ஏன் எதற்கு எப்படி?: வாஸ்துபடி துளசிச் செடிக்கு ஏற்ற இடங்கள் யாவை?

திருக்கோவிலூர் K.B. ஹரிபிரசாத் சர்மா

?ராகுதோஷம், சர்ப்பதோஷம், நாகதோஷம் ஆகிய மூன்றும் ஒரே தோஷம்தானா இல்லை மூன்றும் வெவ்வேறு தோஷங்களா? ஒரு ஜாதக கட்டத்தில் ராகு – கேதுக் களின் எப்படிப்பட்ட அமர்வுநிலையில் யார் யாருக்கெல்லாம் பாதிப்பு வரும்? அடிக்கடி பாம்புகளை பார்ப்பதும் கனவில் தூக்கத்தின்போது பாம்புகளைக் காண்பதும் ராகு தோஷத்தின் வெளிப்பாடா?
– சுபராமா, தஞ்சை.

சர்ப்பதோஷம், நாகதோஷம் இரண்டும் ஒரே பொருளைத் தரக்கூடிய வார்த்தைகள். இந்த இரண்டும் ஒன்றுதான். ராகுதோஷம் என்பது ஜாதகத்தில் ராகுவின் அமர்வுநிலையை வைத்து அறியப்பட வேண்டிய ஒன்று. ராகு – கேதுக்களின் பொதுவான அமர்வு நிலையை மட்டும் வைத்து இவர் இவருக்கு இதுபோன்ற பாதிப்பு வரும் என்று சொல்ல முடியாது. அது ஒவ்வொருவரின் ஜாதக அமைப்பிற்கு ஏற்றவாறு மாறுபடும். லக்னத்தில் ராகு, ஏழில் கேது, இரண்டு மற்றும் எட்டில் ராகு – கேது மற்றும் ராகு – கேதுக்களுக்கு இடையில் மற்ற கிரஹங்கள் அனைத்தும் உள்ளடங்கி இருக்கின்றன அதனால் இது “காள சர்ப்ப தோஷம்’’ என்றெல்லாம் பொதுவாகச் சொல்லப்படுவதைக் கொண்டு பாதிப்பு வரும் என்று தீர்மானிக்கக் கூடாது.

இது முற்றிலும் தவறான கருத்து. இந்த அமைப்பு ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் வெவ்வேறு மாதிரியான பலன்களைத் தரும். ஒரு சிலருக்கு இந்த அமைப்பேகூட மிகவும் நற்பலன்களை உண்டாக்கும். நேரில் அடிக்கடி பாம்புகளைப் பார்ப்பவருடைய ஜாதகத்தில் ராகு – கேதுவின் பலம் என்பது கூடியிருக்கும். இதனை தோஷமாகக் கருதக்கூடாது. கனவில் பாம்பினைக் கண்டால் அருகிலுள்ள மாரியம்மன் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு பிரார்த்தனை செய்து கொள்வது நல்லது.

?மனிதருக்கும் கடவுளுக்கும் உள்ள தொடர்பு என்ன?
– வித்யாராமன், கோடம்பாக்கம்.

பெற்றோருக்கும் பிள்ளைக்கும் உள்ள தொடர்பினைவிட ஒரு படி மேல் என்றுகூட சொல்லலாம். பெற்றோர்கூட ஒரு குறிப்பிட்ட வயது வரை மட்டும்தான் நம்மைக் காப்பாற்ற இயலும். ஆனால், ஜனனம் முதல் மரணம் வரை நம்முடனேயே பயணித்து நம்மைக் காக்கும் சக்தி கடவுள்தான். இதில் அணு அளவும் சந்தேகம் இல்லை.

?நவகிரகங்களை எத்தனை முறை வலம் வருவது சாலச்சிறந்தது?
– விக்னேஷ், சமயபுரம்.

இறைவன் இட்ட பணியைச் செய்து வரும் பணியாளர்களே நவகிரஹங்கள். நவகிரஹங்கள் என்பது சிவாலயத்தில் உள்ள பரிவார தேவதைகள். அவ்வளவுதான். கிரஹத்திற்கு ஒரு சுற்று என்ற கணக்கில் ஒன்பது கிரஹங்களுக்கு ஒன்பது சுற்று சுற்றுவது என்பதெல்லாம் அவரவர் நம்பிக்கைக்கு உட்பட்டது. சிவாலய பிரதட்சணம் செய்யும்போது நவகிரஹங்களையும் சேர்த்துச் சுற்றி வாருங்கள். அதுவே போதுமானது.

?ஒரு ஜாதகத்தில் `வர்கோத்தமம்’ கண்டறிவது எப்படி? வெளிநாடு செல்லும் யோகம் ஜாதகத்தில் எப்படி அமையும்?
– என்.ஜெயக்குமரன், திருநெல்வேலி.

ஜாதகத்தில் ராசி, நவாம்சம் என்று இரண்டு கட்டங்களை குறித்திருப்பார்கள். ஒரு கிரஹம் இந்த இரண்டு கட்டங்களிலும் ஒரே ராசியில் அமைந்திருந்தால் அதனை வர்கோத்தமம் என்று சொல்வார்கள். உதாரணத்திற்கு சூரியன் ராசி மற்றும் நவாம்சம் இரண்டிலும் மேஷ ராசியில் அமர்ந்திருந்தால் சூரியன் வர்கோத்தமம் பெற்றிருக்கிறார் என்று பலன் சொல்வார்கள். இவ்வாறு வர்கோத்தமம் பெறுகின்ற கிரஹம் வலிமையுடன் செயல்படும் என்றும் பலன் உரைப்பார்கள். வெளிநாடு செல்வதற்கு லக்ன பாவம், ஒன்பதாம் பாவம், பத்தாம் பாவம், பன்னிரெண்டாம் பாவம், சந்திரன், குரு, ராகு, கேது ஆகிய கிரஹங்களின் அமர்வுநிலை மற்றும் அவரவர் ஜாதகத்தில் நடைபெறும் தசாபுக்தி ஆகியவை தீர்மானம் செய்யும்.

?வீட்டில் தேனீ கூடு கட்டுவது நல்லதா, கெட்டதா?
– மனோகர், திருச்சி.

வீட்டிற்குள் கட்டுவது கெடுதலைத் தரும். அதே நேரத்தில் வீட்டுத் தோட்டத்தில் கட்டுவது நல்லது. தோட்டம் என்றால் அது அளவில் பெரிதாக இருக்க வேண்டும். வீட்டின் பின்புற வாயிலுக்கும் கூடு கட்டும் இடத்திற்கும் இடையே குறைந்த பட்சம் 60 அடி தூரமாவது இருக்க வேண்டும். தேனீ கூடு கட்டுகின்ற இடம் தென்கிழக்கு மூலையாக இருக்கக் கூடாது.

?வாஸ்துபடி துளசிச் செடிக்கு ஏற்ற இடங்கள் யாவை?
– கி.ராஜசேகர், அனகாபுத்தூர்.

வீட்டின் முற்றம், தலைவாயிலும் பின்புற வாயிலும் ஒரே நேர்க் கோட்டில் இருக்கும் பட்சத்தில் பின்புற வாயிலில் இருந்து 5 அடி தூரத்திற்குள் அமைப்பது, கிழக்கு, மேற்கு, வடமேற்கு மற்றும் வடக்கு திசைப் பகுதிகள் உகந்தது.

உங்களுக்கு ஏற்படும் ஜோதிட சந்தேகங்களை கேள்விகளாக எழுதி கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

ஏன் எதற்கு எப்படி…?
தினகரன், ராசி பலன்கள்
தபால் பை எண். 2908,
மயிலாப்பூர், சென்னை – 600 004.

The post ஏன் எதற்கு எப்படி?: வாஸ்துபடி துளசிச் செடிக்கு ஏற்ற இடங்கள் யாவை? appeared first on Dinakaran.

Tags : Thirukovilur ,KB ,Hariprasad Sharma ,
× RELATED சிறுமி மாயம் போலீசில் புகார்