×

மும்பை – பெங்களூரு இடையே சென்ற விமானத்தின் கழிவறையில் சிக்கி கொண்ட பயணி: 100 நிமிடமாக தவித்த தவிப்பால் பரபரப்பு


மும்பை: மும்பை – பெங்களூரு இடையே சென்ற விமானத்தின் கழிவறையில் சிக்கிக் கொண்ட பயணி, 100 நிமிடமாக உள்ளேயே தவித்த தவிப்பால் பரபரப்பு ஏற்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட எஸ்ஜி -268 என்ற விமானம், பெங்களூருவை நோக்கி தாமதமாக புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட உடனேயே 14டி இருக்கையில் அமர்ந்திருந்த பயணி ஒருவர், விமானத்தின் கழிவறைக்குச் சென்றார். கழிவறையின் கதவு சேதமடைந்து இருந்ததால், அந்த பயணி உள்ளேயே சிக்கிக் கொண்டார். அதிர்ச்சியடைந்த அவர், கழிவறைக்குள் இருந்து கொண்டே சத்தமாக கத்தத் தொடங்கினார். இதையறிந்த விமான ஊழியர்கள், கழிவறை கதவை வெளியிலிருந்து திறக்க எவ்வளவோ முயன்றனர்.

ஆனால் கழிவறையை திறக்க முடியவில்லை. மிகுந்த முயற்சிக்குப் பிறகு, கழிவறைக் கதவைத் திறக்க வேறு வழியில்லை என்பதை உணர்ந்த விமான பணிப்பெண் ஒருவர், ‘ஐயா, கதவைத் திறக்க எங்களால் முடிந்தவரை முயற்சித்தோம், ஆனால் எங்களால் திறக்க முடியவில்லை. நீங்கள் பதற்றப்பட வேண்டாம். இன்னும் சில நிமிடங்களில் விமானம் தரையிறங்கிவிடும். கழிவறை மூடியின் மீது அமர்ந்து கொள்ளுங்கள். விமானம் தரையிறங்கிய உடன் இன்ஜினியர் வருவார். அதன்பின் நீங்கள் வெளியே வந்துவிடுவீர்கள்’ என்று உரத்த குரலில் தெரிவித்தார். அதன்பின்னர் அதிகாலை 3.43 மணிக்கு விமானம் பெங்களூருவில் தரையிறங்கியது.

அதற்குள் தகவலறிந்த இன்ஜினியர் குழுவினர், விமானத்தில் ஏறி கழிவறை கதவை உடைத்து இரண்டு மணி நேரமாக போராடி அந்த பயணியை பத்திரமாக மீட்டனர். உடனடியாக அந்த பயணிக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவ்விவகாரம் குறித்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், விமானத்தின் கழிவறையில் சுமார் 100 நிமிடங்கள் உள்ளேயே சிக்கிக் கொண்டு பயணித்த பயணியின் நிலைமையை கண்டு பலரும் ஆச்சரியமடைந்தனர்.

The post மும்பை – பெங்களூரு இடையே சென்ற விமானத்தின் கழிவறையில் சிக்கி கொண்ட பயணி: 100 நிமிடமாக தவித்த தவிப்பால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Bengaluru ,Mumbai airport ,Maharashtra ,
× RELATED மும்பை விமான நிலையத்தில் ரூ.8.37 கோடி பொருட்கள் பறிமுதல்..!!