×

சபரிமலையில் சரணகோஷம் முழங்க லட்சக்கணக்கான பக்தர்கள் மகரஜோதி தரிசனம்

திருவனந்தபுரம்: லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை பொன்னம்பலமேட்டில் மகரஜோதியை தரிசித்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு கால பூஜைகளுக்காக டிசம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. எருமேலி பேட்டை துள்ளல் கடந்த 12ம் தேதி நடைபெற்றது. மகரவிளக்கு பூஜை தினத்தன்று ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணம் நேற்று முன்தினம் சன்னிதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கேரள தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோயில் முன்வைத்து தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் மற்றும் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி ஆகியோர் ஏற்றுவாங்கி கோயிலுக்குள் கொண்டு சென்றனர்.

இதன்பின் கோயில் நடை சாத்தப்பட்டது. தொடர்ந்து 6.45 மணியளவில் திருவாபரணம் அணிவிக்கப்பட்ட ஐயப்பனுக்கு மகா தீபாராதனை நடத்தப்பட்டது. தீபாராதனை நடந்து கொண்டிருந்த அதே சமயத்தில் 6.46 மணியளவில் பொன்னம்பலமேட்டில் முதல் மகரஜோதி தெரிந்தது. பின் அடுத்தடுத்து இரண்டு முறை மகரஜோதி தெரிந்தது. இந்த சமயத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமியே சரணம் ஐயப்பா என்று சரண கோஷம் முழங்கினர். வரும் 20ம் தேதி வரை சபரிமலையில் நடை திறந்திருக்கும். 18ம் தேதி வரை திருவாபரணம் அணிந்த ஐயப்பனை தரிசிக்கலாம்.

* 103 வயது மூதாட்டி சபரிமலையில் தரிசனம்
சபரிமலையில் தரிசனம் செய் 103 வயதான மதுரை சோழவந்தானை சேர்ந்த ஒரு மூதாட்டி சண்முகத்தம்மாள் நேற்று வந்தார். சன்னிதானத்தில் வைத்து கூட்டத்தில் இவர் திசை மாறிச் சென்று விட்டார். அப்போது தற்செயலாக கேரள அமைச்சர் ராதாகிருஷ்ணனும், தேவசம் போர்டு சிறப்பு செயலாளர் ராஜமாணிக்கமும் மூதாட்டியை தரிசனம் செய்ய வைத்தனர். பின்னர் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

The post சபரிமலையில் சரணகோஷம் முழங்க லட்சக்கணக்கான பக்தர்கள் மகரஜோதி தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Saranakosha ,Sabarimala ,Thiruvananthapuram ,Makarajyothi ,Sabarimala Ponnambalamed ,Sabarimala Ayyappan temple ,Makaravilakku ,Erumeli Pettaya Thullal ,Makaravilakku Pooja ,Makarajyoti ,
× RELATED திருச்சூரில் தண்ணீர் தேடி கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை உயிரிழப்பு..!!