×

மாஜி ராணுவ வீரரின் 2வது மனைவிக்கு 13 ஆண்டுகளுக்கு பிறகு ஓய்வூதியம்: சென்னை மண்டல ராணுவ தீர்ப்பாய கிளை உத்தரவு

சென்னை: முன்னாள் ராணுவ வீரரின் 2வது மனைவிக்கு 13 ஆண்டுகளுக்கு பிறகு ஓய்வூதியத்தை பாக்கி தொகையுடன் தருமாறு ராணுவ தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்திய ராணுவத்தில் நாயக்காக பணியாற்றியவர் ராமு. இவரது மனைவி அனுராதா. ராமு கடந்த 2002ல் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றார். இந்த நிலையில் ராமு கடந்த 2010 ஏப்ரலில் மரணமடைந்தார். இதையடுத்து, கணவரின் ஓய்வூதியத்தை கேட்டு அனுராதா தான் கணவருடன் இருக்கும் புகைப்படத்துடன் தெலங்கானா ராணுவ ஜில்லா சைனிக் நல அதிகாரியிடம் மனு கொடுத்தார்.

இந்த நிலையில் சைனிக் நல அதிகாரிக்கு பத்மா என்பவர் அனுப்பிய விண்ணப்பததில், ராமுவுக்கும் அனுராதாவுக்கும் விவாகரத்து ஆகிவிட்டது. தனக்கும் ராமுவுக்கும் 2003ல் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். எனவே, தனக்கும் குழந்தைகளுக்கும்தான் கணவரின் ஓய்வூதியம் தரப்பட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இதை பரிசீலித்த ராணுவ அதிகாரி, பத்மாதான் வாரிசு என்பதற்கான ஆவணங்கள் ராணுவ ஆவணங்கள் பிரிவில் இல்லை என்று தெரிவித்தார். இதில் குழப்பமடைந்த ராணுவ அதிகாரிகள் நடத்திய விசாரணையில், பத்மாவை ராமு திருமணம் செய்வதற்கு முன்பு அனுராதாவும், ராமுவும் சேர்ந்து இருந்த புகைப்படம் அவரது சகோதரியிடம் இருந்துள்ளது. அதை வைத்து அனுராதாவுக்காக ஓய்வூதியத்தை கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, ராமுவின் வாரிசு தான்தான் என்று அறிவிக்க கோரியும், தனக்கு கணவரின் ஓய்வூதியத்தை தர வேண்டும் எனக்கோரியும் பத்மா ஆந்திர மாநில உயர் நீதிமன்றம் வரை போராடினார். பலன் கிடைக்கவில்லை. இறுதியாக ராணுவ தீர்ப்பாயத்தின் சென்னை மண்டல கிளையில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ராணுவ தீர்ப்பாயம், முதல் மனைவியை விவாகரத்து செய்த ராமு, பின்னர் பத்மாவை திருமணம் செய்து வாழ்க்கை நடத்தியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே, பத்மாதான் ராமுவின் சட்ட பூர்வ வாரிசு என்று முடிவு செய்யப்படுகிறது. எனவே, அவருக்கு உரிய ஓய்வூதிய பாக்கியை 4 மாதங்களுக்குள் தர வேண்டும் என்று உத்தரவிட்டது. சுமார் 13 ஆண்டு போராட்டத்துக்கு பிறகு அவருக்கு ஓய்வூதியம் வழங்க உத்தரவிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

The post மாஜி ராணுவ வீரரின் 2வது மனைவிக்கு 13 ஆண்டுகளுக்கு பிறகு ஓய்வூதியம்: சென்னை மண்டல ராணுவ தீர்ப்பாய கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai Zonal Military Tribunal ,CHENNAI ,Ramu ,Indian Army ,Anuradha ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...