×

சென்னை தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சியை காண குடும்பம், குடும்பமாக மக்கள் வருகை: இன்று காணும் பொங்கலையொட்டி சிறப்பு ஏற்பாடு

சென்னை: தீவுத்திடலில் 48வது சுற்றுலா பொருட்காட்சியைக்காண குடும்பம் குடும்பமாக மக்கள் வருகின்றனர். சென்னை தீவுத்திடலில் 48வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியில், இந்த ஆண்டு ‘‘சுற்றுலா மற்றும் பசுமை முதலீடுகள்’’ என்ற கருப்பொருளை மையமாக கொண்டு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, நான் முதல்வன் திட்டம், காவல்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்பட தமிழ்நாடு அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் 49 அரங்கங்கள், ஒன்றிய அரசு நிறுவனங்களின் 2 அரங்கங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்து சமய அறநிலையத்துறை அரங்கில் சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள பிரசித்திபெற்ற கோயில்களிலிருந்து பிரசாதங்கள் கொண்டுவரப்பட்டு, பார்வையாளர்களுக்கு தினமும் வழங்கப்படுகிறது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரங்கில் முழு உடல் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை உள்பட பல்வேறு மருத்துவ ஆலோசனைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி அரங்கில் பழைய கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றி புதிய ரூபாய் நோட்டுகள், சில்லரை நாணயங்கள் மற்றும் புதிய ரூபாய் நோட்டுகள் வழங்கப்படுகிறது.

இதனிடையே, 80,000 சதுர அடி பரப்பளவில் பொழுதுபோக்கு வளாகம் அமைந்துள்ளது. அதில் ராட்சத சாகச விளையாட்டு சாதனங்கள், சிறுவர் விளையாட்டு சாதனங்கள் மற்றும் நவீன கேளிக்கை சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சிறுவர் ரயில், பனிக்கட்டி உலகம், மீன் காட்சியகம், பேய் வீடு, பறவைகள் காட்சி, 3D தியேட்டர், போன்ற பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன. பொங்கலன்று ஒரே நாளில் 50,000க்கும் மேற்பட்டோர் குடும்பம் குடும்பமாக பொருட்காட்சிக்கு வந்தனர். இன்று காணும் பொங்கலை முன்னிட்டு ஏராளமானோர் வரக்கூடும் என்பதால் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பாக, பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் அண்ணா கலையரங்கத்தில் பல்வேறு கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடந்தது. சிறப்பு விருந்தினராக சென்னை மாவட்ட ஆட்சியர் ராஷ்மி சித்தார்த் ஜகடே கலந்து கொண்டார். மேலும், வெளிநாடு மற்றும் உள்நாடு சுற்றுலா பயணிகளுக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு சுற்றுலா கழக பொது மேலாளர் கமலா, சென்னை மாவட்ட சுற்றுலா அலுவலர் கமலக்கண்ணன், புரசைவாக்கம் வட்டாட்சியர் அகிலா உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post சென்னை தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சியை காண குடும்பம், குடும்பமாக மக்கள் வருகை: இன்று காணும் பொங்கலையொட்டி சிறப்பு ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Chennai Island ,Pongal ,CHENNAI ,48th tourism fair ,48th India Tourism and Industry Expo ,Chennai Archipelago ,and Green Investments' ,
× RELATED காரையூர் முத்துமாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா