×

தொடங்கியது 2வது சர்வதேச புத்தக கண்காட்சி புத்தகங்கள் மொழிபெயர்ப்புக்கு ரூ.3 கோடி மானியம் ஒதுக்கீடு: 40 நாடுகளை சார்ந்த 70 ஸ்டால்கள் இடம்பெறுகிறது; அனைவரும் பங்கேற்க முதல்வர் வேண்டுகோள்

சென்னை: சென்னையில் 2வது சர்வதேச புத்தக கண்காட்சி நேற்று தொடங்கியது. இதில் 40 நாடுகளை சார்ந்த 70 ஸ்டால்கள் இடம்பெற்றுள்ளன. புத்தக கண்காட்சியில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். பள்ளிக் கல்வித்துறை சார்பில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 2வது சர்வதேச புத்தக கண்காட்சி நேற்று தொடங்கியது. இதனை அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கண்காட்சி இன்றும் நாளையும் நடக்கிறது.

விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், ‘‘கடந்த ஆண்டு நடைபெற்ற புத்தக திருவிழா மூலம் 52 தமிழ் புத்தகங்கள் 15 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது. புத்தங்கள் மொழிபெயர்ப்பு செய்யப்படுவதற்காக தனியாக இந்த ஆண்டு ரூ. 3 கோடி மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவு: சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சியில் 40 உலக நாடுகள், 10 இந்திய மாநிலங்களின் பங்கேற்புடன் 50 மொழிகளை சேர்ந்த பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். தொழிற்கல்வி சார்ந்த 200 நூல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்படவுள்ளன. பல்வேறு கருத்தரங்குகள், விவாதங்கள் நடைபெறுகின்றன. எழுத்தாளர்களுக்கும் வெளிநாட்டு பதிப்பு நிறுவனங்களுக்கும் இடையே பாலமாக 20 இலக்கிய முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்ப் படைப்பாளிகள் உலகெங்கும் சென்று சேரவும், உலக மொழிகளில் உள்ள அறிவுச் செல்வத்தை தமிழில் ஆக்கி அளிக்கவும் பெரும் பொருட்செலவில் நமது அரசு முன்னெடுக்கும் இந்த உலக அளவிலான அறிவுத்திருவிழாவில் அனைவரும் பங்கேற்று பயன்பெறுங்கள்.

The post தொடங்கியது 2வது சர்வதேச புத்தக கண்காட்சி புத்தகங்கள் மொழிபெயர்ப்புக்கு ரூ.3 கோடி மானியம் ஒதுக்கீடு: 40 நாடுகளை சார்ந்த 70 ஸ்டால்கள் இடம்பெறுகிறது; அனைவரும் பங்கேற்க முதல்வர் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : 2nd International Book Fair ,Chief Minister ,Chennai ,M. K. Stalin ,School Education Department ,Nandambakkam… ,CM ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...