×

இன்று மாட்டுப்பொங்கல் பண்டிகை: காளைகள், பசுக்களுக்கு அலங்காரம் செய்து கொண்டாட்டம்


சென்னை: இன்று மாட்டுப் பொங்கல் சென்னையில் பல்வேறு இடங்களில் மாடுகளுக்கு அணிகலன்கள் அணிவித்து கொண்டாடப்பட்டது. மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய காளைகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும் கொண்டாடப்படுகிறது. விவசாயிகளின் நண்பனான மாடுகளை பெருமைப்படுத்தும் வகையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து, கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள்.

திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள். உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன்படுத்தப்படும் அனைத்துக் கருவிகளையும் இதேபோல அலங்காரம் செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள்.  தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள்.

சென்னையில் திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பல இடங்களில் மாடுகள் வளர்க்கப்படுகின்றன. மாடுகள் மற்றும் காளைகளை வளர்ப்பவர்கள் இன்று காலை, மாடுகளை மெரினா கடற்கரைக்கு கூட்டிச்சென்று குளிப்பாட்டி மாடுகளுக்கு அலங்காரம் செய்து பூஜை செய்தனர். உழவர்களின் முக்கிய தோழனான மாடுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் நன்றிக்கடன் செலுத்தும் வகையில் இந்த மாட்டுப்பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்நாளில் நடைபெற்றது. அதுமட்டுமல்லாமல் பல மாவட்டங்களில் ரேக்ளா ரேஸ், மாட்டு வண்டிகள் அணிவகுப்பு என்று இன்றைய தினம் களைகட்டியது.

The post இன்று மாட்டுப்பொங்கல் பண்டிகை: காளைகள், பசுக்களுக்கு அலங்காரம் செய்து கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Matuppongal Festival ,CHENNAI ,Pongal ,Matup Pongal ,Tamils ,Patti Pongal ,Calf Pongal.… ,Mattuppongal festival ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...