×

காவலர்களின் நலனை மேம்படுத்த நடவடிக்கை: டிஜிபி சங்கர் ஜிவால் தகவல்


தாம்பரம்: தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றி வரும் காவலர்களின் நலனை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதுவஞ்சேரியில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில், டிஜிபி சங்கர் ஜிவால் கூறியுள்ளார். தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் சார்பில், சேலையூர் அடுத்த பதுவஞ்சேரி பகுதியில் காவல் அதிகாரிகள், காவலர்கள் கலந்துகொண்ட சமத்துவ பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குனர் சங்கர் ஜிவால், அவரது மனைவியுடன் கலந்து கொண்டு பொங்கல் விழாவை கொண்டாடினார்.

விழாவில், காவலர்கள் பங்கு கொண்ட உரியடி, கோலப்போட்டி, கயிறு இழுக்கும் போட்டி, லெமன் ஸ்பூன், மியூசிக்கல் சேர் போன்ற பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதையடுத்து போட்டிகளில் வெற்றிபெற்ற காவலர்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால், அவரது மனைவி, தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். நிகழ்ச்சியில் சங்கர் ஜிவால் பேசுகையில், ‘போலீஸ் பணி சிரமமான பணி. இந்த பணியை சிறப்பாக காவலர்கள் செய்து வருகிறார்கள். குறிப்பாக, பண்டிகை காலங்களில் அதிக சிரமத்துடன் பணிகளை செய்து வருகிறார்கள். எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு பொங்கல் விழாவை காவல்துறை சார்பில் சிறப்பாக கொண்டாட திட்டமிட்டு அனைத்து பகுதிகளிலும் ஆடல், பாடலுடன் மகிழ்ச்சியோடு பொங்கல் விழா நடைபெற்று வருகிறது. காவலர்களின் நலனை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

காவலர்களுக்கு வீடு முக்கியமானது. தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் சிறப்பாக நட வடிக்கை எடுத்து பெரும்பாக்கத்தில் 5 ஏக்கர் நிலம் அரசு மூலம் பெற்று அந்த பகுதியில் ரூ.800 கோடியில் 400 வீடுகள் கட்டப்பட உள்ளது. இதேபோல காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கு காப்பீடுகள் உள்ளன, இருந்தபோதிலும் மருத்துவ காப்பீடுகளை பெறும்போது காலதாமதம் மற்றும் காப்பீடாக குறைந்த தொகை வருவதாக புகார் வந்தது. இதை சரி செய்ய தமிழ்நாடு காவல்துறை முடிவு செய்துள்ளது. இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ₹7 கோடி ஒதுக்கப்பட்டது. அது தற்போது ₹15 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இழப்பீடு தொகை 5 லட்சம் ரூபாயிலிருந்து, தற்போது ₹8 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. காவலர்கள் மகிழ்ச்சியோடு தங்கள் பணிகளை செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார்.

The post காவலர்களின் நலனை மேம்படுத்த நடவடிக்கை: டிஜிபி சங்கர் ஜிவால் தகவல் appeared first on Dinakaran.

Tags : TGB ,CHANKAR JIWAL ,Thambaram ,Equality Pongal Festival ,Paduwancheri ,TGB Sankar Jival ,Tamil Nadu Police ,Tambaram Municipal Police Commissariat ,Baduwancheri ,Salaiur ,Sankar Jival ,
× RELATED உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மேல்முறையீடு