×

மக்கள் பிரதிநிதிகள் ஒருவர் கூட இல்லை மாநகராட்சிகளின் பதவிக்காலம் நிறைவால் புதிய திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கல்: மாநில அரசின் கட்டுப்பாட்டில் ரூ.1,10,556 கோடி பட்ஜெட்

மும்பை: மகாராஷ்டிராவில் 2 மாநகராட்சிகளில் மட்டுமே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பதவி வகித்த நிலையில், அவர்களது பதவிக்காலமும் கடந்த ஆண்டோடு முடிந்துவிட்டது. இதனால் 27 மாநகராட்சிகளும் அவற்றுக்கான ரூ.1,10,556 கோடி பட்ஜெட்டும் அரசின் மறைமுக கட்டுப்பாட்டில் வந்துவிட்டன. மகாராஷ்டிர மாநிலத்தில் 27 மாநகராட்சிகள் உள்ளன. அதில் அகமதுநகர் மற்றும் துலே ஆகிய 2 மாநகராட்சிகளில் மட்டுமே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பதவி வகித்து வந்தனர். மற்ற அனைத்து மாநகராட்சிகளையும் அரசால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளே நிர்வகித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அகமதுநகர் மற்றும் துலே மாநகராட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்து விட்டதால், தற்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி பிரதிநிதிகள் ஒருவர் கூட இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2020ம் ஆண்டு முதலே முடிவடையத் தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக 2020, 2021ல் தேர்தல் நடத்தப்படவில்லை. 2022ல் உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. அதன் பிறகு, ஷிண்டே அரசு ஆட்சிக்கு வந்தது.

அப்போது உள்ளாட்சி அமைப்புகளில் ஓபிசி இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால் மாநகராட்சிகள், ஜில்லா பரிஷத் மற்றும் முனிசிபல் கவுன்சில் என எந்த தேர்தலும் நடத்தப்படவில்லை. நடப்பாண்டு அக்டோபர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்து புதிய அரசு அமைந்த பிறகே, மாநகராட்சி தேர்தல் நடத்தப்படும் என்று அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. தற்போதைய நிலவரப்படி மாநில அரசுக்கான சொந்த பட்ஜெட் ரூ.5,47,450 கோடியாக உள்ளது. இப்போது 27 மாநகராட்சிகளும் அரசின் கட்டுப்பாட்டுக்கு வருவதால் அவற்றுக்கான ரூ.1,10,556 கோடி பட்ஜெட்டும் மறைமுகமாக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் என கூறப்படுகிறது.

இது பற்றி மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மாநகராட்சிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பு இல்லாதது ஆளும் கட்சி அதிகாரம் ஓங்குவதற்கு வழிவகுக்கும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் தான் மக்களுக்காக செயல்படும். மக்களின் நலனை கருத்தில் கொண்டே பட்ஜெட் செலவினங்கள் அமையும். ஆனால், அரசு ஒருவரை பிரதிநிதியாக நியமித்தால் ஆளும் கட்சியின் நலனுக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார். மற்றொரு அதிகாரி ஒருவர் கூறுகையில், மாநகராட்சிகள் மூலம் சாலை மேம்பாட்டு பணிகள், உள் கட்டமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

ஆனால், மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால், மக்கள் தேவைக்கேற்ப புதிய திட்டங்களை வகுப்பது, செயல்படுத்துவது ஆகியவற்றில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் நேரடியாக முடிவு செய்ய வேண்டிய இடத்தில் இருக்கின்றனர். இருப்பினும், வார்டு வாரியாக மக்களின் தேவைகளையும், செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்களையும் மாமன்றத்தில் முன்வைக்க வார்டு உறுப்பினர்கள் யாரும் இல்லை. சில உள்கட்டமைப்புத் திட்டங்களை செயல்படுத்த தேர்தல் வரை காத்திருக்க முடியாது. இதனால், மக்களின் தேவைக்கேற்ப திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது என்றுதான் கூற வேண்டும், என்றார்.

அதேநேரத்தில், ஆளுங்கட்சியிடம் பட்ஜெட் கட்டுப்பாடு உள்ளதால், தங்கள் வசதிக்கேற்ப திட்டங்களை செயல்படுத்தவும், பாரபட்சமாக தங்கள் ஆதரவு உறுப்பினர்களின் வார்டுகளுக்கு மட்டும் தனி கவனம் செலுத்தவும் வாய்ப்புகள் ஏற்படலாம். எதிர்கால தேர்தலை கருத்தில் கொண்டு இதுபோன்ற செயல்களில் ஆளும் அரசு இறங்கினால், அது சில சமயம் அதிகாரிகளுக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதாக அமையும். ஆட்சி மாற்றத்தால் சில பிரச்னைகளையும் அவர்கள் எதிர்கொள்ள நேரலாம். எனவே, விரைவில் தேர்தல் நடத்தி மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்தால்தான், மக்கள் தங்கள் பகுதிக்கான திட்டங்களை எதிர்பார்க்க முடியும் என கட்சியினர் மற்றும் மாநகராட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

The post மக்கள் பிரதிநிதிகள் ஒருவர் கூட இல்லை மாநகராட்சிகளின் பதவிக்காலம் நிறைவால் புதிய திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கல்: மாநில அரசின் கட்டுப்பாட்டில் ரூ.1,10,556 கோடி பட்ஜெட் appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Maharashtra ,Dinakaran ,
× RELATED கேளம்பாக்கம் அருகே பரபரப்பு மனைவி...