×

486 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு; அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கோலாகலம்: முதல் பரிசு பெற்ற வீரருக்கு கார் பரிசு, 2 போலீசார் உட்பட 39 பேர் காயம்

அவனியாபுரம்: புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நேற்று கோலாகலமாக நடைபெற்றது. அவனியாபுரம் கிராமத்துக் கமிட்டியினர் ஒருங்கிணைந்து செயல்படாததால், நீதிமன்ற உத்தரவுப்படி மாவட்ட நிர்வாகம் மற்றும் மதுரை மாநகராட்சி இணைந்து போட்டிக்கு ஏற்பாடுகள் செய்தன. இதையடுத்து மாநகராட்சி சார்பில் ரூ.28.37 லட்சம் செலவில் வாடிவாசல் மாடுபிடி வீரர்களுக்கான முன்னேற்பாடுகள் காளைகளுக்கு முன்னேற்பாடுகள் என்று அனைத்துக்கும் டெண்டர் விடப்பட்டு பணிகள் சிறப்பாக முடிக்கப்பட்டன. தகுதி சான்றிதழ் பெற்ற காளை மாடுகள் மற்றும் மாடுபிடிவீரர்கள் பதிவு செய்தனர்.

இதில் 1,000 காளைகளுக்கும் 600 மாடுபிடி வீரர்களும் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஆன்லைன் மூலம் டோக்கன் வழங்கப்பட்டது. இதனை அடுத்து நேற்று காலை 7 மணி அளவில் வணிக வரி துறை மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கி வைக்கப்பட்டன. வீரர்கள் உறுதிமொழி எடுத்த பின்னர் வரிசையாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்று என 10 சுற்றுகளாக காளைகள் பங்கேற்றன. மாடுபிடி வீரர்கள் ஒரு சுற்றுக்கு 50 பேர் என 400 பேர் களமிறங்கினர்.

கால்நடை துறை சார்பில் இணை இயக்குனர் நடராஜ் குமார் தலைமையில் 6 பேர் கொண்ட 9 குழுக்கள் காளைகளுக்கு பரிசோதனை செய்து அவற்றை களத்தில் இறக்கி விட்டனர். 2 கால்நடை ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தப்பட்டன. போலி டோக்கன் காரணமாக 21 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. அதேபோல் மதுரை மாநகராட்சி தலைமை மருத்துவ அதிகாரி வினோத் தலைமையில் 150 மருத்துவ பணியாளர்கள் மாடுபிடி வீரர்கள் தகுதியை பரிசோதனை செய்த பின் களத்திற்கு அனுப்பினர். காயம் அடைந்தவர்களுக்கு அருகில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் சிகிச்சை அளித்தனர் மேலும் எலும்பு முறிவு கண்டறிய முதன் முறையாக நடமாடும் எக்ஸ்ரே வாகனம் அங்கு தயார் நிலையில் நிறுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மதுரை மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் தலைமையில் 4 துணை ஆணையாளர்கள், 10 உதவி ஆணையாளர்கள், 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் மதுரை மாநகராட்சி சார்பில் நடமாடும் கழிவறை குடிநீர் வசதி காளைகளுக்கு உணவு நீர் மற்றும் பொதுமக்கள் கண்டு களிக்கும் வகையில் 2 இடங்களில் எல்இடி திரை மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. போடுகள் முட்டியதிலும், தடுமாறி விழுந்ததிலும் மாடுபிடி வீரர்கள் 18 பேர், மாடு உரிமையாளர்கள் 24 பேர், போலீசார் 2 பேர் பொதுமக்கள் 2 பேர் என மொத்தம் 48 பேர் காயம் அடைந்தனர் இதில் 9 பேர் மேல் சிகிச்சைக்காக அரசு ராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

முதல் பரிசாக மாடுபிடி வீரர் அவனியாபுரம் கார்த்திக் 17 காளைகளை அடக்கி கார் மற்றும் கோப்பையை வென்றார். அவருக்கு அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் பரிசு மற்றும் கோப்பையை வழங்கினர். மேலும் அவருக்கு மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த் சார்பாக கன்றுடன் கூடிய பசுமாடு வழங்கப்பட்டது. 2ம் பரிசு அவனியாபுரம் ரஞ்சித்குமாருக்கு பீரோ மற்றும் சைக்கிளும் பரிசாக வழங்கப்பட்டது.

அதே போல் சிறந்த காளைக்கான முதல் பரிசாக அவனியாபுரம் ஜி.ஆர்.கார்த்திக் காளைக்கு காரும் கன்றுடன் கூடிய பசுமாடும் ஜி.ஆர்.சதீஷ்குமாரிடம் வழங்கப்பட்டது. 2ம் பரிசு திருப்பரங்குன்றம் சீனிவேல் காளைக்கு பீரோ, கட்டில் வழங்கப்பட்டது. மேலும் ஜல்லிக்கட்டில் பங்கேற்று வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் காலை உரிமையாளர்களுக்கு ரொக்கம், தங்க காசுகள், மின் விசிரி, கட்டில், பீரோ, அண்டா உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.

The post 486 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு; அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கோலாகலம்: முதல் பரிசு பெற்ற வீரருக்கு கார் பரிசு, 2 போலீசார் உட்பட 39 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Jallikattu ,Avaniyapuram ,Avaniyapuram village committee ,Madurai Corporation ,Avaniyapuram Jallikattu Kolagalam ,
× RELATED விராலிமலையில் இன்று நடக்கிறது: போட்டி நடத்த ஜல்லிக்கட்டு களம் தயார்