×

இலங்கையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவித்து அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும்: முத்தரசன்


சென்னை: இலங்கை கடற்படையின் தொடரும் தாக்குதல், மீனவர்கள் கைதுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் பகுதியில் இருந்து, வங்கக் கடலில் மீன் பிடிக்க சென்ற 12 மீனவர்கள் நேற்று (14.01.2024) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, காங்கேசன் துறைமுக கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 12 மீனவர்களும் எல்லை தாண்டி நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

மீனவர்களை கைது செய்த கடற்படையினர், அவர்களிடம் இருந்த மீன்பிடி வலைகளை அறுத்தெறிந்து நாசம் செய்துள்ளனர். படகுகளை அபகரித்து எடுத்துச் சென்றுள்ளனர். அண்மையில் நாகை மாவட்ட மீனவர்கள் எட்டுப் பேர் கைது செயப்பட்டதை தொடர்ந்து நடைபெற்ற இந்தச் சம்பவம் மீனவர்களை பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளியுள்ளது. இலங்கை கடற்படையின் அத்துமீறல்களும், தாக்குதலும் நிறுத்தப்படுவதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும். இதற்கான முறையில் இலங்கை அரசுடன் ராஜீய முறை அழுத்தம் தந்து தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், தமிழ்நாடு மீனவர்கள் தாக்கப்படுவதையும், அவர்களது வலைகளும், படகுகளும் உடைத்து சேதப்படுவதையும் பாஜக ஒன்றிய அரசு மௌன சாட்சியாக வேடிக்கை பார்த்து வருகிறது. மீனவர் நலனை பாதுகாக்காத பாஜக ஒன்றிய அரசின் அலட்சியப் போக்கை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன், மீனவர்களை விடுவித்து அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும் என என்று வலியுறுத்தியுள்ளார்.

The post இலங்கையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவித்து அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும்: முத்தரசன் appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Mutharasan ,Chennai ,Secretary of State of ,Communist Party ,of ,India ,Muttarasan ,Sri Lankan Navy ,Jegadapatnam ,Pudukkottai district ,Bank Sea ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...