×

மக்களவை தேர்தல் முடிவுகள் முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டுள்ளதா? : பாஜவுக்கு காங்.பதிலடி

இம்பால்: மக்களவை தேர்தல் முடிவுகள் முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டு விட்டதாக கூறுவதை ஏற்க முடியாது என்றும் புலி இன்னும் உயிரோடுதான் உள்ளது என பாஜவுக்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. காங்கிரஸ் பொது செயலாளர் ஜெயராம் ரமேஷ் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை துவங்கிய நிலையில் மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகளை எவ்வாறு சமாளிப்பீர்கள் என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு,‘‘ கட்சி அமைப்பு தேர்தலுக்கு தயாராக உள்ளது. யாத்திரையில் ராகுல் கலந்து கொண்டாலும் பிரசாரத்தில் அவர் பங்கேற்பார். யாத்திரை நிறைவடையும் போது தேர்தல் ஆரம்பிக்கும். ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கலாம். ஆனால் அதற்கு முன்னதாகவே யாத்திரை முடிவடைந்து விடும். இணையவழியாக கூட்டங்கள் நடத்தப்படும். இதில் எந்த பிரச்னையும் இருக்காது’’ என்றார். மக்களவை தேர்தலில் பாஜ வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பது முன்கூட்டியே முடிவான ஒன்று என்றும் தேர்தலில் வெற்றி பெற்று மோடியே 3வது முறையாக பிரதமர் பதவியில் அமர்வார் என்று பாஜ தலைவர்கள் கூறி வருவது குறித்து கேட்டபோது,‘‘ புலி இன்னும் உயிரோடு தான் உள்ளது என்பதே என்னுடைய ஒரே பதிலாகும்’’ என்றார்.

பொது தேர்தலில் எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி ஆச்சரியத்தை நிகழ்த்துமா என்று கேட்டதற்கு,‘‘ கடந்த 2003ம் ஆண்டு நடந்த சட்டீஸ்கர்,ராஜஸ்தான்,ம.பி சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியடைந்தது. இதனால்,காங்கிரஸ் கட்சி செல்வாக்கு முடிந்து விட்டது என கூறினர். ஆனால்,2004ம் ஆண்டு தேர்தலில் இந்தியா ஒளிர்கிறது என்று மிக பெரிய பிரசாரத்தை முன்னெடுத்த போதிலும் பாஜ தோல்வி அடைந்தது. காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதே போன்ற சரித்திரம் மீண்டும் படைக்கப்படும்’’ என்றார். மேலும் அவர் கூறுகையில் பலமான காங்கிரஸ் அமைவதன் மூலம்தான் வலுவான எதிர்க்கட்சியை உருவாக்க முடியும். காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவதற்காகதான் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது’’ என்றார்.

 

The post மக்களவை தேர்தல் முடிவுகள் முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டுள்ளதா? : பாஜவுக்கு காங்.பதிலடி appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,Congress ,BJP ,Imphal ,Tiger ,General Secretary ,Jayaram Ramesh ,Bajau ,
× RELATED மேற்கு வங்கத்தில் பாஜவுக்கு...