×

ரயிலில் கடத்தி கைதான மேற்கு வங்க ஊழியர் திடுக் சிகரெட், சாக்லேட்டில் கஞ்சா ஆயில் தடவி விற்பனை: கோடிக்கணக்கில் சம்பாதித்த ஒடிசா, கேரளா கும்பல்

சேலம்: ஒடிசா, ஆந்திராவில் இருந்து, சேலம் வழியே கேரளா செல்லும் ரயில்களில் கஞ்சா, போதை பவுடர் உள்ளிட்டவை கடத்தப்படுவதை தடுக்க, சேலம் போதை பொருள் தடுப்பு பிரிவு, ஆர்பிஎப், தமிழக ரயில்வே போலீசார் இணைந்து, ரயில்களில் தொடர் ேசாதனையை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம், டாடா நகர்-எர்ணாகுளம் எக்ஸ்பிரசில் சேலம் போதை பொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பாபுசுரேஷ்குமார், ஆர்பிஎப் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜேந்திரகுமார் மீனா தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில், ரயில்வே ஒப்பந்த ஊழியரான மேற்குவங்கத்தை சேர்ந்த தீபக்சேதி (31) என்பவரை மடக்கி பிடித்து, அவரிடம் இருந்து ரூ.2.10 கோடி மதிப்புள்ள 2.100 கிலோ எடை கொண்ட கஞ்சா ஆயிலை பறிமுதல் செய்தனர். பிடிபட்ட தீபக் சேதியை, சேலம் போதை பொருள் தடுப்பு பிரிவு ஸ்டேஷனுக்கு கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர், டாடா நகர்-எர்ணாகுளம் எக்ஸ்பிரசின் ஏசி பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு பெட்ஷீட், தலையணை கொடுக்கும் ரயில்வே ஒப்பந்த ஊழியர் என்பதும், ஒடிசா-ஆந்திரா எல்லையில் உள்ள துவாடா ரயில்வே ஸ்டேஷனில் இருந்து ரூ.2.10 கோடி மதிப்புள்ள கஞ்சா ஆயிலை வாங்கிக் கொண்டு, கேரளா மாநிலம் எர்ணாகுளத்திற்கு கடத்திச் சென்று வழங்க இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர்.

இந்த கஞ்சா ஆயில் கடத்தலில் ஈடுபட்ட ஒடிசா, கேரளா கும்பல் குறித்த விவரங்கள் தெரியவந்துள்ளதால், அவர்களை கூண்டோடு கைது செய்ய, சேலம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனிடையே, கஞ்சா ஆயிலை எப்படி போதைக்காக பயன்படுத்துவார்கள் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஒடிசாவில் உள்ள மலைப்பகுதியில் கஞ்சா செடிகளை வளர்க்கும் கும்பல், அந்த கஞ்சா செடிகளை காய்ச்சி, கஞ்சா ஆயிலை தயார் செய்து கோடிக்கணக்கில் விற்கின்றனர். 100 கிலோ கஞ்சா செடியில் இருந்து ஒரு கிலோ ஆயில் எடுக்கின்றனர். கேரளாவில் தொடர்ந்து கஞ்சா புகைக்கும் இளைஞர்களை குறி வைத்து, இந்த கஞ்சா ஆயிலை விற்பனை செய்து வருகின்றனர். சிகரெட்டில் கஞ்சா ஆயிலை தடவியும், சாக்லேட்டில் மிக மிக குறைவாக சேர்த்து சாப்பிட்டும், போதைக்காக பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது. இந்த கஞ்சா ஆயில் சிகரெட், சாக்லேட்களை ஆயிரக்கணக்கில் விலை வைத்து விற்கின்றனர். கேரளாவில் இந்த கஞ்சா ஆயிலை வாங்க இருந்த கும்பலை பிடித்தால், அம்மாநிலத்தில் எங்கெல்லாம் இதனை விற்பனை செய்கிறார்கள்? யாருக்கெல்லாம் தொடர்புள்ளது? என்பது தெரியவரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

The post ரயிலில் கடத்தி கைதான மேற்கு வங்க ஊழியர் திடுக் சிகரெட், சாக்லேட்டில் கஞ்சா ஆயில் தடவி விற்பனை: கோடிக்கணக்கில் சம்பாதித்த ஒடிசா, கேரளா கும்பல் appeared first on Dinakaran.

Tags : West Bengal ,Odisha, ,Kerala ,Salem ,Andhra ,Salem Narcotics Control Unit ,RPF ,Tamil Nadu Railway Police ,
× RELATED ஆளுநர் மாளிகையில் பெண் ஊழியரிடம்...