×

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொருட்கள் வாங்குவதற்காக கோயம்பேடு சிறப்பு சந்தையில் அலைமோதிய மக்கள் கூட்டம்: கரும்பு கட்டு ரூ.500, இஞ்சி, மஞ்சள் கொத்து ரூ.100 ஆக குறைத்து விற்பனை

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அங்காடி நிர்வாகம் சார்பில் கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த 11ம் தேதி சிறப்பு சந்தை அமைக்கப்பட்டது. இந்த சிறப்பு சந்தையில் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். கரும்பு, மஞ்சள், வாழைத்தார், பூக்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் பொங்கல் பானை, அரிசி வெல்லம் ஆகியவற்றை வாங்குதற்காக நேற்று காலை பொதுமக்களும், வியாபாரிகளும் திரண்டனர். கோயம்பேடு சிறப்பு சந்தையில் நேற்று காலை 500க்கும் மேற்பட்ட வாகனங்களில் கரும்புகள் வந்து குவிந்துள்ளது. இஞ்சி, மஞ்சள் கொத்து ஆகியவை 200க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்துள்ளது. இதன் காரணமாக கோயம்பேடு மார்க்கெட் கடும் போக்குவரத்து நெரிசலால் திணறியது. ஆந்திரா, கர்நாடகா, மகராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து வந்துள்ள வாகனங்கள் அனைத்தும் நெரிசலில் சிக்கியதால் பொருட்களை இறக்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. அதேசமயம் வெங்காயம், தக்காளி தவிர மற்ற காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரு கிலோ கேரட்ரூ.45, பீன்ஸ், முள்ளங்கி ரூ.35, வெண்டைக்காய்ரூ.40,கத்தரிக்காய் ரூ.25, முருங்கைக்காய் ரூ.120, இஞ்சி ரூ.100, அவரை, பீர்க்கங்காய், கோவைக்காய் ரூ.35, எலுமிச்சை ரூ.50, கொத்தவரங்காய் ரூ.45க்கும் விற்பனை செய்யப்பட்டது.

நேற்று கேரட், பீன்ஸ் ரூ.90, பீட்ரூட், முள்ளங்கி ரூ.60, வெண்டைக்காய் ரூ.55, கத்தரிக்காய் ரூ.30, காராமணி ரூ.50, புடலங்காய் ரூ.35, சுரைக்காய் ரூ.25, முருங்கைக்காய் ரூ.130, காலிபிளவர் ரூ.25, பச்சைமிளகாய், பட்டாணி ரூ.50, இஞ்சி ரூ.110, பூண்டு ரூ.450, அவரைக்காய் ரூ.56, பீர்க்கங்காய் ரூ.57, எலுமிச்சை ரூ.80, நூக்கல் 40, கோவைக்காய் ரூ.30, கொத்தவரங்காய் 40க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிலோ மல்லி ரூ.3,000, ஐஸ் மல்லி ரூ.2,400, காட்டுமல்லி, கனகாம்பரம் ரூ.1000, முல்லை ரூ.1,500, ஜாதிமல்லி ரூ.1,200,அரளி பூ ரூ.200, சாமந்தி ரூ.200, சம்பங்கி ரூ.100, பன்னீர்ரோஸ் ரூ.120, சாக்லேட் ரோஸ் ரூ.140 க்கும் விற்பனை செய்யப்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நேற்று கோயம்பேடு மார்கெட்டில் அனைத்து பூக்களின் விலை 4 மடங்கு உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லி ரூ.3,700, ஐஸ் மல்லி ரூ.3,000, காட்டுமல்லி ரூ.2700, ஜாதிமல்லி ரூ.1,500, முல்லை ரூ.1,800, கனகாம்பரம் ரூ.1,200, அரளி பூ ரூ.300, சாமந்தி ரூ.150, சம்பங்கி ரூ.180, பன்னீர்ரோஸ் ரூ.120, சாக்லேட் ரோஸ் ரூ.160 க்கும் விற்பனை செய்யப்பட்டது. சிறப்பு சந்தை ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து பொருட்களை வாங்கவரும் மக்கள் கூட்டம் தினமும் அதிகரித்து வருகிறது. வரத்து குறைவால் ஒரு கட்டு கரும்பு நேற்று முன்தினம் ரூ.1,000க்கு விற்பனையானது. இஞ்சி, மஞ்சள் கொத்து ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் ,வரத்து அதிகரிப்பால் ஒருகட்டு கரும்பு நேற்று ரூ.500, இஞ்சி, மஞ்சள் கொத்து ரூ.100க்கும் விற்பனை செய்யப்பட்டது.

 

The post பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொருட்கள் வாங்குவதற்காக கோயம்பேடு சிறப்பு சந்தையில் அலைமோதிய மக்கள் கூட்டம்: கரும்பு கட்டு ரூ.500, இஞ்சி, மஞ்சள் கொத்து ரூ.100 ஆக குறைத்து விற்பனை appeared first on Dinakaran.

Tags : Koyambedu ,Pongal festival ,Chennai ,Dinakaran ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து...