×

பொங்கல் பரிசுத்தொகுப்பு, ரூ.1000 ரொக்கம் 97% பேருக்கு வழங்கப்பட்டுள்ளது: அதிகாரிகள் தகவல்

சென்னை: பொங்கல் பண்டிகையை யொட்டி கடந்த 10ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுமார் 35,000 ரேஷன் கடைகளில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்க பணம் மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சக்கரை, முழு கரும்பு ஒன்றும் வழங்கப்பட்டது. ரொக்க பணம் மற்றும் பரிசு தொகுப்பை பெற நேற்று மாலை 6 மணி வரை கெடு விதிக்கப்பட்டது. அதனால் நேற்று ஏராளமானோர் ரேஷன் கடைகளுக்கு வந்து பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்று சென்றனர். அந்தவகையில் நேற்று வரை 97 சதவீதம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கூட்டுறவு சங்கப்பதிவாளர் அனைத்து ரேஷன் கடைகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் 13ம் தேதி (நேற்று) மாலை 6 மணிக்கு பிறகு பொங்கல் பரிசு மற்றும் ரூ.1000 பெறாதவர்களின் தொகை மற்றும் மீதியான கரும்புகளை ரூ.24க்கு விற்பனை செய்து பணம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் கரும்பு விற்பனை உத்தரவை திரும்ப பெற வேண்டும் என ரேஷன் கடை பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து தொமுச உள்ளிட்ட அனைத்து ரேஷன் கடை சங்க நிர்வாகிகள் கூறியதாவது: சுமார் ஒரு மாதம் வரை சோகை வாடாமல் பச்சை பசேல் என்று இருக்க கூடிய வகையில் கரும்புகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடைகளிலே கரும்புகளை பத்திரப்படுத்தி வைத்து உள்ளோம். மீதம் உள்ள கரும்புகளை தயவுசெய்து கடைகளில் இருந்து திரும்பப் பெற்றுக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும். பணியாளர்கள் பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் ஊக்கத்தொகை உடனடியாக வழங்கினால் நன்றாக இருக்கும். வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கியதற்கு ஊக்கத்தொகை வவுச்சர் மூலம் பெற்றுக்கொள்ள உரிய அறிவுரைகளுக்கு உத்தரவிட்டால் மிக்க மகிழ்ச்சி அடைவார்கள். மீதமான கரும்புகளை விற்று பணத்தை கட்டச் சொல்லும் அறிவிப்பை உயர் அதிகாரிகள் திரும்ப பெற வேண்டும் என்று கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

 

The post பொங்கல் பரிசுத்தொகுப்பு, ரூ.1000 ரொக்கம் 97% பேருக்கு வழங்கப்பட்டுள்ளது: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Pongal ,Chennai ,Pongal festival ,Tamil Nadu ,
× RELATED அழகு நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழா