×

9 ஆண்டு கால பாஜ ஆட்சியின் அநீதிகளுக்கு நியாயம் கேட்கும் ராகுலின் நீதி நடைபயணம் தொடங்கியது: மணிப்பூரில் அமைதியை மீட்டெடுப்போம் என சூளுரை

9 ஆண்டு கால பாஜ ஆட்சியின் அநீதிகளுக்கு நியாயம் கேட்கும் ராகுலின் நீதி நடைபயணம் தொடங்கியது: மணிப்பூரில் அமைதியை மீட்டெடுப்போம் என சூளுரைஇம்பால்: கடந்த 9 ஆண்டு கால பாஜ ஆட்சியின் அநீதிகளுக்கு நியாயம் கேட்கும் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி நடைபயணம் மணிப்பூரில் நேற்று தொடங்கியது. நடைபயணத்தை தொடங்கிய ராகுல், ‘வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் மீண்டும் அமைதி, நல்லிணக்கத்தை மீட்டெடுப்போம்’ என உறுதி அளித்தார். மக்கள் பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப ஒன்றிய பாஜ அரசு வாய்ப்பளிக்க மறுப்பதால், நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளை மீண்டும் நிலைநாட்டும் நோக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்திய ஒற்றுமை பயணம் எனும் தனது முதல் யாத்திரையை கடந்த 2022 செப்டம்பர் முதல் 2023 ஜனவரி 30ம் தேதி வரை 136 நாட்கள் மேற்கொண்ட ராகுல், கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை நடந்து சென்றார். இதில் மக்களை நேரடியாக சந்தித்த ராகுல் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து, இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை எனும் 2ம் கட்ட யாத்திரையை ராகுல் காந்தி மணிப்பூரில் நேற்று தொடங்கினார். இதற்காக டெல்லியில் இருந்து நேற்று காலை சிறப்பு விமானத்தில் ராகுலுடன் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலர் மணிப்பூர் மாநிலம் இம்பாலுக்கு வந்தனர். இம்பால் விமான நிலையத்தில் ராகுலுக்கு கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து தவுபால் மாவட்டத்தில் உள்ள கோங்க்ஜாம் போர் நினைவிடத்தில் 1891ம் ஆண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் உயிர் தியாகம் செய்த மணிப்பூரிகளுக்கு ராகுல் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அங்குள்ள தனியார் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் இணைந்து இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மூவர்ண தேசியக் கொடியை கார்கே கொடுக்க, அதை ராகுல் பெற்றுக் கொண்டு யாத்திரையை தொடங்கி வைத்து பேசியதாவது: பாஜவின் அரசியலால் மணிப்பூர் மாநிலம் விலைமதிப்பற்ற விஷயங்களை இழந்து விட்டது. இங்கு லட்சக்கணக்கான மக்கள் இழப்புகளை சந்தித்துள்ளனர். ஆனால் உங்கள் கண்ணீரை துடைக்கவோ, கையை பிடித்து ஆறுதல் கூறவோ, உங்களை அரவணைக்கவோ பிரதமர் இங்கு வரவில்லை. ஒருவேளை பிரதமர் மோடியும், பாஜ, ஆர்எஸ்எஸ்சும் மணிப்பூரை இந்தியாவின் ஒரு பகுதியாக கருதாமல் இருக்கலாம். அதனால் உங்களின் வலி, அவர்களின் வலியாக உணராமல் உள்ளனர். மணிப்பூர் மக்கள் அனுபவித்த வலியை நாங்கள் புரிந்து கொள்கிறோம். உங்களின் காயம், சோகத்தை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. இங்கு நல்லிணக்கம், அமைதி மற்றும் நேசத்தை நாங்கள் மீண்டும் கொண்டு வருவோம். இவ்வாறு ராகுல் கூறினார்.

முன்னதாக பேசிய மல்லிகார்ஜூனா கார்கே, ‘‘மணிப்பூருக்கு வாக்கு கேட்க மட்டுமே வரும் பிரதமர் மோடியால், இங்கு மக்கள் வேதனையில் இருக்கும் போது அவர்களின் துயரத்தை பகிர்ந்து கொள்ள வர முடியவில்லை. கடலில் ஓடவும், குளிக்கவும் நேரமிருக்கிறது. ஆனால் மணிப்பூருக்கு வர அவருக்கு நேரமில்லை. ‘ராம், ராம்’ என கோஷமிடுகிறார். ஆனால் ஓட்டுக்காக செய்யக்கூடாது. பாஜ மதத்தையும் அரசியலையும் கலக்கிறது. மக்களைத் தூண்டுகிறது. உதட்டில் ராமரையும், பக்கத்தில் கத்தியை வைத்திருக்கிறார்கள். சமூக நீதி, மதச்சார்பின்மை மற்றும் சமத்துவத்திற்கு காங்கிரஸ் துணை நிற்கிறது. அரசியல் சாசனம், ஜனநாயகத்தை காப்பாற்றவும், பாசிச சக்திகளுக்கு எதிராக போராடவும் ராகுல் இந்த நீதி யாத்திரையை மேற்கொண்டுள்ளார்’’ என்றார். மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், ஆளும் பாஜ கட்சி அயோத்தி ராமர் கோயில் மீது கவனம் செலுத்தி வரும் நிலையில், 9 ஆண்டு பாஜ ஆட்சியில் மக்களுக்கு நிகழ்ந்த அநீதிகளுக்கு நியாயம் கேட்டு ராகுல் 2ம் கட்ட நடைபயணம் தொடங்கியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

 

The post 9 ஆண்டு கால பாஜ ஆட்சியின் அநீதிகளுக்கு நியாயம் கேட்கும் ராகுலின் நீதி நடைபயணம் தொடங்கியது: மணிப்பூரில் அமைதியை மீட்டெடுப்போம் என சூளுரை appeared first on Dinakaran.

Tags : Rahul ,BJP ,Manipur ,Sulurai Imphal ,Rahul Gandhi ,
× RELATED ராகுல் வழக்கு 7ல் விசாரணை