×

மார்ச் 15ம் தேதிக்குள் மாலத்தீவில் இருக்கும் இந்திய ராணுவம் வெளியேற வேண்டும்: மாலத்தீவு அதிபர் முகம்மது முய்சு உத்தரவு

மாலத்தீவு: மார்ச் 15ம் தேதிக்குள் மாலத்தீவில் இருக்கும் இந்திய ராணுவம் வெளியேற வேண்டும். வேறு எந்த நாட்டின் ராணுவம் இங்கே இருந்தாலும் எனது நிலைப்பாடு இதுதான்
மாலத்தீவு அதிபர் முகம்மது முய்சு திட்டவட்டமாக கூறியுள்ளார். சுமார் 70 இந்திய ராணுவ வீரர்கள், மாலத்தீவில் உள்ள ரேடார் நிலையங்கள், கண்காணிப்பு விமானங்களை பராமரித்து வருகின்றனர்.

பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தையும், இந்தியர்களையும் குறிப்பிட்டு மாலத்தீவு அமைச்சர்களான மரியம் ஷியுனா, மல்ஷா ஷரீப், மஜ்ஜூம் மஜித் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தனர். அதேபோன்று ஆளும் பிபிஎம் கட்சியின் கவுன்சில் உறுப்பினர் ஜாஹித் ரமீஸ் தெரிவித்திருந்த கருத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த 3 அமைச்சர்களையும் மாலத்தீவு அரசு சஸ்பெண்ட் செய்தது.

அத்துடன், இது அவர்களின் தனிப்பட்ட கருத்து எனவும், இதில் மாலத்தீவு அரசுக்கும் சம்பந்தமில்லை எனவும் விளக்கம் அளித்தது. எனினும், பிரதமர் மோடி தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்துக்களை மாலத்தீவு அமைச்சர்கள் தெரிவித்திருந்த நிலையில், அந்நாட்டு தூதர் இப்ராகிம் ஷாகீப்புக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பி இருந்தது.

இந்தியா மற்றும் மாலத்தீவு ஆகிய இருநாடுகளுக்கிடையே இந்த விவகாரம் பூதாகரமாகி வெடித்துக் கொண்டிருந்த நிலையில், மாலத்தீவின் புதிய அதிபர் முகம்மது முய்சு, அரசுமுறை பயணமாக சீன நாட்டிற்குச் சென்றிருந்து மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. முய்சுவுக்கு முன், மாலத்தீவு அதிபர் யாராக இருந்தாலும் பதவியேற்றதும் முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தருவதே வாடிக்கையாக இருந்தது.

ஆனால், இந்த விஷயத்தில் முய்சு முரண்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதற்குக் காரணம், முகமது முய்சுவின் மாலத்தீவு முற்போக்கு கட்சியில் சீனாவுக்கு அதிக செல்வாக்கு இருப்பதாகக் கருதப்படுகிறது. இதற்கிடையே இந்தியா இடையே உரசல் போக்கு தொடரும் நிலையில் சீனாவுடன் இணைப்பை பலப்படுத்த மாலத்தீவு அதிபர் பல்வேறு உத்திகளை முன்னெடுத்தார். அதன் அங்கமாக மாலத்தீவில் இருந்து இந்தியா தனது படைகளை வாபஸ் பெறுமாறு, அந்நாட்டு அதிபர் முய்சு காலக்கெடு விதித்துள்ளார்.

அதன்படி இந்திய ராணுவ வீரர்கள் மார்ச் 15க்குள் அந்நாட்டை விட்டு வெளியேறியாக வேண்டும் என அவர் அறிவித்துள்ளார். மாலத்தீவு அதிபராகப் பொறுப்பேற்ற பின்னர், அண்மையில் முதல் அரசு முறை பயணமாக சீனா சென்றார் முகமது முய்சு. அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த சில நாட்களில், இந்தியாவுக்கு எதிரான இந்த உத்தரவினை அவர் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

The post மார்ச் 15ம் தேதிக்குள் மாலத்தீவில் இருக்கும் இந்திய ராணுவம் வெளியேற வேண்டும்: மாலத்தீவு அதிபர் முகம்மது முய்சு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Indian Army ,Maldives ,President Mohammad Muizu ,President ,Mohammad Muysu ,Mohammad Muizu ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் மாலத்தீவில் ஆளும்...