×

நாளை மகர விளக்கு பூஜை சபரிமலையில் குவியும் பக்தர்கள்: 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் நாளை நடக்கிறது. அதையொட்டி கட்டுக்கடங்காமல் குவிந்து வரும் பக்தர்களின் பாதுகாப்புக்காக 4000க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அவசர உதவிக்கு ஹெலிகாப்டரும் வரவழைக்கப்பட்டு உள்ளது. சபரிமலையில் கடந்த 54 நாளாக நடந்து வந்த மண்டல, மகரவிளக்கு காலம் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. கடந்த நவம்பர் 17ம் தேதி தொடங்கிய மண்டல காலம் டிசம்பர் 27ம் தேதி நடைபெற்ற மண்டல பூஜையுடன் நிறைவடைந்தது. மகரவிளக்கு கால பூஜைகள் டிசம்பர் 31ம் தேதி தொடங்கியது.

மண்டல, மகரவிளக்கு காலம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் நாளை நடைபெறுகிறது. நாளை அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். தொடர்ந்து 2.46 மணியளவில் மகர சங்கிரம பூஜையும் சிறப்பு நெய்யபிஷேகமும் நடைபெறும். அதன் பிறகு வழக்கமான பூஜைகளுடன் மதியம் 1 மணிக்கு நடை சாத்தப்படும்.
மீண்டும் மாலை 5 மணிக்கு மட்டுமே நடை திறக்கப்படும். மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணம் நாளை மாலை 6.30 மணியளவில் சன்னிதானத்தை அடையும். இந்த திருவாபரணம் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடத்தப்படும்.

இந்த சமயத்தில் தான் பொன்னம்பலமேட்டில் 3 முறை மகரஜோதி தெரியும். மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலையில் பக்தர்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றனர். இன்றும், நாளையும் தரிசனத்திற்கான முன்பதிவு கட்டுப்படுத்தப்பட்டு உள்ள போதிலும் பக்தர்கள் தொடர்ந்து சபரிமலையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். கடந்த சில தினங்களாக தரிசனத்திற்கு வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரும்பிச் செல்லாமல் மகரஜோதி தெரியும் பாண்டித் தாவளம், ஹில்டாப் உள்பட பல்வேறு இடங்களில் குடில்களை அமைத்து தங்கி உள்ளனர்.
சபரிமலையில் நெரிசல் மூலம் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

சன்னிதானம் முதல் புல்மேடு வரை 4 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். கூடுதல் பாதுகாப்புக்கு ஹெலிகாப்டரும் வரவழைக்கப்பட்டு உள்ளது. தென்மண்டல ஐஜி ஸ்பர்ஜன் குமாரின் மேற்பார்வையில் 4 எஸ்பிக்கள் தலைமையில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மகரவிளக்கு பூஜைக்கு முன்னதாக நடைபெறும் சுத்திக்கிரியை பூஜைகள் நேற்று முதல் தொடங்கின. நாளை காலை 11.30 மணிக்குப் பின்னர் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

* 18ம் தேதி வரை ஐயப்பனை தரிசிக்கலாம்

மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் முடிந்த பிறகு வரும் 20ம் தேதி இரவு வரை சபரிமலை கோயில் நடை திறந்திருக்கும். வரும் 18ம் தேதி வரை திருவாபரணம் அணிந்த ஐயப்பனை பக்தர்கள் தரிசிக்கலாம். 19ம் தேதியுடன் இந்த வருட மண்டல, மகரவிளக்கு கால நெய்யபிஷேகம் நிறைவடையும். 21ம் தேதி காலை 6.30 மணி அளவில் சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். அன்று பக்தர்கள் யாரும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதன் பிறகு மாசி மாத பூஜைகளுக்காக பிப்ரவரி 13ம் தேதி சபரிமலை கோயில் நடை மீண்டும் திறக்கப்படும்.

The post நாளை மகர விளக்கு பூஜை சபரிமலையில் குவியும் பக்தர்கள்: 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு appeared first on Dinakaran.

Tags : Makar Lantern Puja Sabarimala ,Thiruvananthapuram ,Maharajoki ,Pooja ,Maharajoti ,Darisana ,Sabarimala Aiyappan Temple ,Makara Llama ,Pooja Sabarimala ,
× RELATED திருச்சூரில் தண்ணீர் தேடி கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை உயிரிழப்பு..!!